கோவை வழியாக தப்பிச் செல்ல முயன்றபோது சிக்கிய பெண் மாவோயிஸ்ட்டை ரகசிய இடத்தில் வைத்து கியூ பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தமிழகம் - கேரளா எல்லையை ஒட்டியுள்ள அட்டப்பாடி அருகேஉள்ள மஞ்சகண்டி வனப்பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபரில் ‘கேரள தண்டர் போல்டு’ எனப்படும் நக்சல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கும் வனப்பகுதியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்களுக்கும் இடையே தொடர்ந்து 2 நாட்கள் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் மாவோயிஸ்ட்கள் 4 பேர் கொல்லப்பட்டனர்.
இதில், கர்நாடக மாநிலம் சிக்மகளூர் பெகாருவைச் சேர்ந்த பெண் மாவோயிஸ்ட் ஸ்ரீமதி என்பவர் உட்பட சிலர் குண்டு காயங்களுடன் தப்பியோடிவிட்டனர். அவர்களை நக்சல் தடுப்புப் பிரிவு போலீஸார் தேடி வந்தனர்.
இந்நிலையில், ரகசிய தகவலின் அடிப்படையில் கியூ பிரிவு போலீஸார், நேற்று அதிகாலை 3 மணிக்கு ஆனைகட்டி வனத்துறை சோதனைச்சாவடியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். காலை 5.30 மணிக்கு ஆனைகட்டியில் இருந்து கோவைக்கு வந்த அரசு மாநகரப் பேருந்து, சோதனைச்சாவடி அருகே வந்தபோது, அங்கு மறைந்திருந்த கியூ பிரிவு போலீஸார், பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனர். பேருந்தில் பதுங்கியிருந்த ஸ்ரீமதியை பிடித்தனர்.
துடியலூர், தடாகம் காவல்எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தேடப்பட்டு வரும் மாவோயிஸ்ட்களின் பட்டியலில் ஸ்ரீமதி பெயரும் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீமதியை, பீளமேட்டில் உள்ள கியூ பிரிவு அலுவலகத்தில் போலீஸார் விசாரித்தனர். பின்னர், ஈரோட்டுக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக போலீஸார் கூறும்போது, ‘‘ஸ்ரீமதி மீது கர்நாடகாவில் 13 வழக்குகள் உள்ளன. தமிழகத்தில் வழக்குகள் இல்லை. கேரளாவில் ஒரு வழக்கு இருக்கலாம் எனத் தெரிகிறது. அவருக்கு உதவியவர்கள் குறித்து விசாரித்து வருகிறோம்’’ என்றனர்.