தமிழகத்தில் 15 மாநகராட்சிகளுக்கு சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம் தயாரிக்கப்படும் என்று சட்டப்பேரவையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று சுற்றுச்சூழல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அத்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் வழங்கிய பதிலுரையில் கூறியிருப்பதாவது:
தமிழகம் முழுவதும் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதிமுதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளது.
தடையை மீறி பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளின் மின் இணைப்புகளைத் துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உள்ளாட்சித்துறை மற்றும் வருவாய்த் துறை சார்பில் நடத்தப்பட்ட சோதனையில் இதுவரை 1339 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விதிமீறலில் ஈடுபட்டோரிடம் இருந்து ரூ.6 கோடியே 26 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவர் வெளியிட்ட புதிய அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சிகளில் சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்காக ஒவ்வொரு மாநகராட்சிக்கும் தலா ரூ.8 லட்சம் வழங்கப்பட உள்ளது.
தோல் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ள திருப்பத்தூர், வேலூர்,ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களின் வழியாக செல்லும் பாலாற்றின் சுற்றுச்சூழலை பாதுகாக்க, வேலூரை தலைமையிடமாக கொண்டு, ரூ.50 லட்சம் செலவில் பறக்கும் படை அமைக்கப்படும்.
ரூ.3 கோடியே 32 லட்சத்தில்...
மாநிலத்தில் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களை சிறந்த முறையில் மேலாண்மை செய்ய, தமிழகத்தின் நிலப்பரப்பு, மண் வளம், மழைப்பொழிவு, நீர்பாசன முறை, பயிரிடுதல், சுற்றுச்சூழல் மற்றும் சமூக பண்புகள் அடிப்படையில் 7 வேளாண் காலநிலை மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வேளாண் மண்டலங்கள் வாரியாக காலநிலை மீள்வளர்ச்சி திட்டத்தை ரூ.3 கோடியே 32 லட்சத்தில் தயாரிக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் அறிவித்தார்.