இந்தியாவில் கோவிட் -19 வைரஸ்பரவாமல் தடுக்க ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு தடை கோரியும், செல்போன்களில் ‘ரிங்-டோனாக’வரும் விழிப்புணர்வு விளம்பரத்துக்கு தடை கோரியும் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அலெக்ஸ்பென்சிகர் என்பவர் தாக்கல் செய்துள்ள மனு:
கோவிட்-19 வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் தொடங்கியுள்ளது. இந்தவைரஸ் பொதுமக்கள் கூடும்இடங்களில் எளிதாகப் பரவுவதால் இத்தாலியில் நடைபெறஉள்ள ஐஎப்எல் கால்பந்து போட்டியைக் காண விளையாட்டு ரசிகர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது. ஜூலை மாதம் தொடங்கவுள்ள ஒலிம்பிக் போட்டியும் தள்ளிப்போக வாய்ப்புள்ளது.
இந்நிலையில், வரும் மார்ச் 29 முதல் மே 24 வரை இந்தியாவில் நடக்கவுள்ள ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டிக்கும் தடை விதிக்க வேண்டும். இந்த போட்டிக்கு வெளிநாடுகளில் இருந்தும்வீரர்கள் வருவார்கள். சுமார் 30ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர்வரை போட்டியை பார்வையிடுவர். எனவே, கோவிட்-19 வைரஸை தடுக்கும் வகையில், இந்த ஐபிஎல் போட்டிக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கோரியுள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
இதனிடையே வழக்கறிஞர் சிவராஜசேகரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவிட்-19 வைரஸ் தொடர்பாக மத்திய அரசு சார்பில் மொபைல் போன்களில் இருமல் சப்தத்துடன்விழிப்புணர்வு விளம்பரம் ஒலிபரப்பப்படுவது அந்த நோயின் தாக்கத்தைவிட அதிக மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது.
இதற்கு கட்டணம் வசூலிக்கப்படுமா என்பதும் தெரியவில்லை. மத்திய அரசு இதுபோன்ற விழிப்புணர்வு நடவடிக்கையை வாட்ஸ்ஆப், ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களிலும் திரையரங்குகள் மற்றும் தொலைக்காட்சிகளின் மூலமாகவும் ஒலிபரப்பினால் அதிக பலன் அளிக்கும்.
ஆனால் அவசர நேரங்களில் முக்கியமானவர்களை தொடர்புகொள்ள முற்படும்போது, இந்த விளம்பரம் சுமார் 45 நொடிகள் நீடிப்பதால் அதுவரை பொறுமை காக்க வேண்டியுள்ளது. எனவே,மொபைல் போன்களில் ஒலிபரப்பாகும் இந்த விளம்பரத்துக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கோரியுள்ளார். இந்த மனுவும் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.