கோப்புப்படம் 
தமிழகம்

சென்னையில் மாநகர பேருந்துகள் வருவதை அறிந்துகொள்ள புதிய செயலி அறிமுகம்: மக்களின் ஆதரவுக்கு ஏற்ப அனைத்து பேருந்துகளுக்கும் விரிவாக்கம்

செய்திப்பிரிவு

சென்னையில் மாநகர பேருந்துகள் வருவதை பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் ‘சலோ' என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பயணிகள், பேருந்துகளின் வருகை, வழித்தட நிறுத்தங்கள், எவ்வளவு நேரத்துக்குள் வரும் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ள முடியும்.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படும் 700-க்கும் மேற்பட்ட வழித் தடங்களில் 3,300 மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றின் மூலம் பல லட்சக்கணக்கான மக்கள் தினமும் பயணம் செய்து வருகின்றனர்.

பெரும்பாலான வழித் தடங்களில் குறிப்பிட்ட நேரத்துக்குள் மாநகர பேருந்துகள் சேவை கிடைக்க வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், போக்குவரத்து நெரிசல் போன்ற சில காரணங்களால் சீரான பேருந்து சேவை கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.

இதனால், பேருந்து நிறுத்தங்களில் காத்திருக்கும் பயணிகள் பேருந்துகள் எப்போது வருமோ என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர். வெளியூரில் இருந்து வரும் பொதுமக்களுக்கும் எந்த வழித்தடத்தில் எந்தெந்த மாநகர பேருந்துகள் செல்கின்றன என்ற விவரங்களும் தெரியாமல் அவதிப்படுகின்றனர்.

இந்நிலையில், மாநகர பேருந்துகளின் இயக்கம், வழித் தடங்கள், எப்போதும் வரும், தற்போது எங்கே பேருந்து வந்து கொண்டிருக்கிறது என்ற விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் ‘சலோ’ (Chalo) என்ற செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

செல்போனில் ‘கூகுள் பிளே’ தளத்துக்குச் சென்று இந்தச் செயலியை பதவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன்பிறகு, இந்தச் செயலியில் வழித் தடம் அல்லது பேருந்து எண்ணைக் கொண்டு தேடினால் பேருந்துகள் இயக்கம், வழித் தட விவரங்கள், அடுத்தடுத்து வரும் பேருந்துகளின் இடைவெளி நேரம் போன்ற தகவல்களை மக்கள் எளிமையாகப் பெறலாம்.

மாநகர போக்குவரத்துக் கழகத்தில் இயக்கப்படும் பெரும்பாலான பேருந்துகளில் ஜிபிஎஸ் (வாகன நகர்வு) தொழில்நுட்பம் இருப்பதால், இந்த வசதியை மக்கள் பெற முடியும். மக்களிடம் இருந்து கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து, அனைத்து பேருந்துகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT