கோப்புப்படம் 
தமிழகம்

கோவிட் -19 பாதிப்பு சிகிச்சைக்கு காப்பீட்டுத் தொகை கோரலாம்: இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

கோவிட்-19 வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கான காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்குமாறு இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கோவிட்-19 பாதிப்பு உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு வந்த சுமார் 1.40 லட்சம் பேர் விமான நிலையங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அவர்களில் 1,225 பேர் மருத்துவமனை மற்றும் வீட்டுக்கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதில், 75 பேருக்கு ரத்தமாதிரி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், ஒருவருக்கு மட்டும் பாதிப்பு இருப்பதுஉறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்நோய் பாதிப்புக்கு உள்ளாகும் நோயாளிகள், மருத்துவ சிகிச்சைக்கான காப்பீட்டுத் தொகையை பெறுவது குறித்து பொதுகாப்பீட்டு நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

சளி, இருமல் மற்றும் காய்ச்சல் ஆகியவை கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதற்கு முக்கியமான அறிகுறிகளாகும். இந்தபாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையில் சேர்ந்துசிகிச்சை பெறுமாறு அரசு தெரிவித்துள்ளது.

பாலிசி விதிகளுக்கு உட்பட்டு...

இதன்படி, கோவிட்-19 வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெறுபவர்களுக்கு மருத்துவக் காப்பீட்டு தொகை கோரினால்,அவர்கள் எடுத்திருக்கும் பாலிசிகளின் விதிகளுக்கு உட்பட்டு காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்குமாறு காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதேபோல், ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதற்காக மருத்துவமனையில் கண்காணிப்பில் இருந்தால் கூட அதற்கான சிகிச்சை காப்பீட்டுத் தொகைவழங்கப்பட வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏதாவது சிலகாரணங்களுக்காக நோயாளிகளுக்கு தொகை மறுக்கப்பட நேர்ந்தால், சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனங்கள் உரிய ஆய்வு செய்த பிறகே மறுக்க வேண்டும்.

இதுதவிர குறிப்பிட்ட நோய்களுக்கு மட்டுமே என வரையறுத்துள்ள நிறுவனங்கள், கோவிட்-19 வைரஸ் பாதிப்புக்கான சிகிச்சைக்கும் காப்பீட்டு தொகை வழங்கும் வகையில் தங்களது பாலிசி திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் எனவும் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

எனவே, பொதுமக்கள் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால், மருத்துவக் காப்பீடு மூலம் சிகிச்சைக்கான தொகையை பெற முடியும். மருத்துவக் காப்பீட்டை காலாவதி ஆகாமல் வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு பொதுகாப்பீட்டு நிறுவன அதிகாரிகள் கூறினர்.

SCROLL FOR NEXT