தமிழகம்

தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம்: ஜே.பி.நட்டா அறிவிப்பு

செய்திப்பிரிவு

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவராகப் பதவி வகிக்கும் எல்.முருகன் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் அடுத்து வரும் 3 ஆண்டுகள் இப்பதவியில் இருப்பார்.

தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் செயல்பட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு செப்.1-ம் தேதி தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் பாஜக தலைவராக யாரைத் தேர்வு செய்வது என்பதில் பெரும் குழப்பம் நீடித்து வந்தது.

பாஜக தலைவர் ரேஸில் எச்.ராஜா, கருப்பு முருகானந்தம், முருகானந்தம், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், சீனிவாசன், எஸ்.வி.சேகர் என பலரது பெயர்கள் கூறப்பட்டன. இடையில் ஜீவஜோதியின் பெயரும் அடிபட்டது.

இதுதவிர மூத்த தலைவர்கள் சிலரின் பெயர்களும் அடிபட்டன. இதனால் டிசம்பர் மாதம் அறிவிக்க வேண்டிய தலைவர் பதவி நியமனம் ஒத்திவைக்கப்பட்டது. டெல்லி மேலிடம் மூன்று மாதம் கழித்து தற்போது யாரும் எதிர்பாராத வகையில் தமிழக பாஜக தலைவராக எல்.முருகனை நியமித்துள்ளது.

எல்.முருகன் தற்போது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராகச் செயல்பட்டு வருகிறார். 1977-ம் ஆண்டு பிறந்த எல். முருகன் அடிப்படையில் வழக்கறிஞர். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர்.

சென்னை அம்பேத்கர் கல்லூரில் சட்டப்படிப்பு முடித்துள்ளார். அறிவுசார் சொத்துரிமை குறித்து டிப்ளமோ பட்டமும், சென்னை சென்னைப் பல்கலைக்கழகத்தில் சட்ட முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் மனித உரிமை குறித்த முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். 15 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞர் அனுபவம் பெற்ற முருகனுக்கு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளும் நன்றாகத் தெரியும்.

சவால் மிகுந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நேரத்தில் பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பேற்றுள்ள முருகன், பாஜகவை தமிழகத்தில் அடுத்து வலுவான இடத்துக்கு நகர்த்தும் நிலையில் இப்பொறுப்பை ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT