``கால்நடை மருத்துவத் துறையில் 200 மருத்துவர்கள் வரும் ஆண்டிலேயே நியமிக்கப்படுவர்” என, தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில், தமிழக எல்லையை ஒட்டிய 26 இடங்களில் சுகாதாரத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த முகாம்கள் மூலம், கேரளாவில் இருந்து வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. கொங்கு மண்டலத்தில் உள்ள கோழிப் பண்ணைகள் அனைத்தும் தீவிர கண்காணிப்பில் உள்ளன. எவ்வித அச்சமும் தேவையில்லை.
கறிக்கோழி மற்றும் முட்டைகளை சாப்பிடுபவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. எனவே, பறவை காய்ச்சல் குறித்து மக்கள் அச்சப்படத் தேவைஇல்லை.
கால்நடை மருத்துவத் துறையில் ஏற்கெனவே 650 மருத்துவர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது, கால்நடை கிளை மருந்தகங்கள் அதிக அளவில் திறக்கப்படுகின்றன. இதன் காரணமாக தேவை அதிகமாக உள்ளதால், மேலும் 200 மருத்துவர்கள் வரும் ஆண்டிலேயே நியமிக்கப்படுவர்.
தமிழகம் முழுவதும் 108 இடங்களில் ரூ.43 கோடியில் கால்நடை மருந்தகங்கள் கட்டுவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டியில் ரூ.65 லட்சத்தில் கால்நடை மருந்தக கட்டிடத்துக்கு விரைவில் அடிக்கல் நாட்டப்பட உள்ளது.
அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் 35 லட்சமாக இருந்த செட்டாப் பாக்ஸ் எண்ணிக்கை 18 லட்சமாக குறைந்திருந்தது. தற்போது, 28 லட்சமாக உயர்ந்துள்ளது. இன்னும் 10 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் 15 நாட்களில் வாங்க உள்ளோம். அதன்பின்னர், தமிழகம் முழுவதும் எங்கெல்லாம் அரசு கேபிள் டிவி இல்லையோ அங்கெல்லாம் அனைத்து மக்களுக்கும் இலவசமாக செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்படும் என்றார்.