சாலை வசதிக்காக மரங்கள் அழிக்கப்பட்ட இடம். படங்கள்: பெ.ஜேம்ஸ்குமார் 
தமிழகம்

அரசியல் கட்சி பிரமுகரின் வசதிக்காக 65 ஆயிரம் மரக்கன்றுகளை அழித்து வரிப் பணத்தில் சாலை போடுவதா? - செங்கல்பட்டை அடுத்த அஞ்சூர் கிராம மக்கள் அதிருப்தி

செய்திப்பிரிவு

பெ. ஜேம்ஸ்குமார்

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம், அஞ்சூர் கிராம ஊராட்சியில் தர்காஸ், புதுப்பேட்டை, தெற்குப்பட்டு, அஞ்சூர், இருளர் காலனி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இதுதவிர மகேந்திரா சிட்டி தொழிற்பூங்காவும் உள்ளது.

இந்த ஊராட்சியில் தொழிற்பூங்கா தொடங்கப்பட்டதால் சாலை, திறந்தவெளி இடம் ௭ன மொத்தம் 76 ஏக்கர் நிலம் ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதில் சாலைக்கான இடம்போக, 51 ஏக்கர் நிலம் மீதம் இருந்தது. இந்த திறந்தவெளி இடத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தலைமையில், சுமார் 65 ஆயிரம் மரக்கன்றுகள் அண்மையில் நடப்பட்டன.

இந்த நிலத்தை ஒட்டி அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரின் தனியார் பள்ளியும் மற்ற சில பிரமுகர்களின் இடங்களும் உள்ளன. இங்கு சென்றுவர வசதியாக காட்டாங்கொளத்தூர் ஒன்றிய நிர்வாகத்தின் துணையுடன் சுமார் 1 ஏக்கர் 30 சென்ட் நிலத்தில் ரூ. 22 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பில் புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இச்சாலை அமைப்பதற்காக ஆட்சியர் நட்டுவைத்திருந்த சுமார் 65 ஆயிரம் மரக்கன்றுகளும் அழிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. சாலை அமைக்கும் அளவுக்கு இங்கு மக்கள் புழக்கம் இல்லாத நிலையில் தார்ச்சாலை பொது பயன்பாட்டுக்கு போடப்பட்டதைப் போல காட்ட சமுதாய நலக்கூடம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

அரசின் பல துறைகளும் இணைந்து ஒரு தனிநபருக்காக 65 ஆயிரம் மரக்கன்றுகளை அழித்ததுடன் சாலை, சமுதாய நலக்கூடம் ௭ன தேவையில்லாமல் பொதுமக்களின் வரிப் பணம் வீணடிப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் மீது மக்கள் கடும் அதிருப்தியைடைந்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ராஜேந்திரன் கூறும்போது, "பிரச்சினைக்குரிய அந்த இடத்தில் அரசியல் பிரமுகருக்கு வசதியாகவே இந்த சாலையும் சமூகக்கூடமும் கட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆட்சியர் வரை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை" என்றார்.

இதுதொடர்பாக காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் லீமாரோஸிடம் கேட்டபோது, "பொதுமக்கள் வசதிக்காகத்தான் சாலை வசதியும் சமுதாய நலக்கூடமும் கட்டப்பட உள்ளது" என்றார். ஆனால், பொதுமக்கள் குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.

SCROLL FOR NEXT