கோப்புப்படம் 
தமிழகம்

குரோம்பேட்டையில் வரும் 20-ம் தேதி நடைபெறுகிறது போக்குவரத்து ஊழியருக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை: கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் காத்திருப்பு போராட்டம்

செய்திப்பிரிவு

போக்குவரத்துக்கழக ஊழியர்களின் 14-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை மார்ச் 20-ம் தேதி குரோம்பேட்டையில் நடைபெறும் என்றுபோக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

தமிழக அரசு போக்குவரத்துக்கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் என 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது. இதுவரை 13 ஊதிய ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான நிலுவைத் தொகைகள் உள்ளிட்டபணப்பயன்கள் வழங்குவது தொடர்பாகவும் அவ்வப்போது போராட்டங்கள் நடந்து வருகிறது.

இந்நிலையில், 13-வது ஊதியஒப்பந்தம் முடிவடைந்து 7 மாதங்களுக்கு மேல் ஆகும் நிலையில், 14-வது ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அழைக்கும்படி, தொழிற்சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன.

இந்நிலையில், மார்ச் 20-ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறும் என்று போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான ஊதியஒப்பந்தத்தில் ஊதியம், அகவிலைப்படி, இதர படிகள் மற்றும் பல்வேறு சலுகைகள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில் 14-வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள நிர்வாகத் தரப்பிலான குழு அமைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் முதல்கட்ட பேச்சுவார்த்தை நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இடையில் மார்ச்20-ம் தேதி காலை 10 மணிக்கு குரோம்பேட்டை மாநகர போக்குவரத்துக்கழக பயிற்சி மையத்தில் நடைபெற உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

காத்திருப்பு போராட்டம்

இந்நிலையில், போக்குவரத்து சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு நிதி வழங்க வேண்டும். ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உறுதிப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் காத்திருப்பு போராட்டங்களை தொழிற்சங்கங்கள் நடத்தி வரும் நிலையில், சங்கங்களை அழைத்துப் பேசாமல் அரசு தன்னிச்சையாக தேதியை அறிவித்துள்ளது.

அரசு யாரோடு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். கடந்த 2018-ல் சம்பந்தமில்லாதவர்களை வைத்து ஓப்பந்தம் உருவாக்கியதால் 8 நாட்கள் வேலை நிறுத்தம் நடைபெற்றது.

இம்முறை பேச்சுவார்த்தைஎன்ற பெயரில் தொழிலாளர்களை வஞ்சிக்க வேண்டாம். கூட்டமைப்பு சங்கங்களை அழைத்து பேசிஎந்த சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெறும் என்பதைதெளிவுபடுத்த வேண்டும். அது வரை காத்திருப்பு போராட்டம் தொடரும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT