மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க கே.கே.நகரில்உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில வள மற்றும் பயிற்சிமையத்தில் பிரதிவாரம் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடைபெறும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீத்தாலட்சுமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பார்வைதிறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்காக திங்கட்கிழமைகளிலும் கை, கால் இயக்க குறைபாடுடையோருக்கு செவ்வாய்க்கிழமைகளிலும், அறிவுசார் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு வெள்ளிக்கிழமைகளிலும் சம்பந்தப்பட்ட சிறப்பு மருத்துவர்கள் மூலம் அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் கே.கே.நகர் அரசு புறநகர்மருத்துவமனை வளாகத்தில்அமைந்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில வள மற்றும் பயிற்சி மையத்தில் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடத்தப்பட்டு பாதிப்பின் சதவீதத்துடன் கூடிய மருத்துவ சான்றுவழங்கப்படுவதோடு அடையாளஅட்டையும் பதிவு செய்யப்படுகிறது.
மல்டிபிள் ஸ்கிளிரோசிஸ், பார்க்கின்சன் நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதத்தின் 4-வது செவ்வாய்கிழமைகளிலும் மற்றும் ஹீமோபீலியா, தாலசீமியா, சிக்கில்செல் நோய் உள்ளிட்ட பாதிப்புகள் உடையவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 4-வது புதன்கிழமைகளிலும் நரம்பியல் மருத்துவ நிபுணர், மனநல மருத்துவர் மற்றும் குருதி இயல் மருத்துவ நிபுணர் ஆகியோர் அடங்கிய குழு மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில வள மற்றும் பயிற்சி மையத்துக்கு வருகை தந்து மாற்றுத்திறனாளிகளை ஆய்வு செய்து அவர்களுக்கு பாதிப்பின் சதவீதத்துடன் கூடிய மருத்துவர் சான்று வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மருத்துவ சான்றின்அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளும் வழங்கப்பட உள்ளன. எனவே, சென்னை கே.கே.நகரில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில வள மற்றும் பயிற்சி மையத்தில் நடைபெறும் சிறப்புமுகாமில் பங்கேற்று மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையை பெற்று பயனடையலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட ஆட்சியர் ஆர்.சீத்தாலட்சுமி கூறியுள்ளார்.