கோவை காட்டூரில் இந்து முன்னணி அலுவலகம் செயல்பட்டுவரும் கட்டிடம். 
தமிழகம்

கோவை இந்து முன்னணி அலுவலகம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு: பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 2 பேர் கைது

செய்திப்பிரிவு

கோவையில் இந்து முன்னணி மாநகர் மாவட்ட தலைமை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக, காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

காட்டூர் ரங்கே கோனார் வீதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் முதல் தளத்தில் இயங்கிவரும் இந்த அலுவலகத்தில், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்த பின்னர் ஊழியர்கள் அறையை பூட்டிச் சென்றனர். நேற்று காலை அலுவலக ஊழியர் சிவா, அலுவலகத்தின் வெளிப்புற பிரதான கதவைத் திறந்தபோது, படிக்கட்டு அருகே பாட்டில் உடைந்து கிடந்தது.

சுவரின் குறிப்பிட்ட பகுதி கருப்பு நிறத்தில் இருந்தது. மர்ம நபர்கள், மதுபாட்டிலில் பெட்ரோல் ஊற்றி, அதில் திரியை போட்டு பற்றவைத்து, இந்து முன்னணி அலுவலக வளாகத்தில் வீசிச் சென்றது தெரியவந்துள்ளது. காற்றின் வேகத்துக்கு திரியில் இருந்த தீ அணைந்து இருக்கலாம் என தெரிகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக ஆய்வாளர் லதா தலைமையிலான காட்டூர் காவல் துறையினர், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணையில் ஈடுபட்டனர். சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் பாலாஜி சரவணன், துணைக் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், மாவட்டத் தலைவர் தசரதன், செய்தி தொடர்பாளர் தனபால் உள்ளிட்டோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, தொடர்புடை யவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸாரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

2 பேர் கைது

இதற்கிடையே கோவை கணபதி வேதாம்பாள் நகரில் உள்ள பள்ளிவாசலில், கடந்த 5-ம் தேதி அதிகாலை மர்ம நபர்கள், பெட்ரோல் குண்டை வீசிச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இதில் தொடர்புடைய ரத்தினபுரியைச் சேர்ந்த பாண்டி என்ற சடையாண்டி(41), அகில்(23) ஆகியோரை ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான போலீஸார் நேற்று கைது செய்தனர்.

கடந்த வாரம் இந்து முன்னணி அமைப்பின் மாவட்டச் செயலாளர் ஆனந்த், தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இருவரும் பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டை வீசிச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இதில் சடையாண்டி பாஜக உறுப்பினராகவும், அகில் விஎச்பி உறுப்பின ராகவும் உள்ளனர்.

இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களிடம் இருந்து இருசக்கர வாகனம், 2 செல்போன், பெட்ரோல் குண்டு தயாரிக்க பயன்படுத்தியப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

SCROLL FOR NEXT