பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ரஜினி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்து குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய பேச்சு சர்ச்சையானது. இரண்டு பேரால் சோ வளர்ந்தார் என்று கூறிய ரஜினி அதற்கான காரணத்தைக் கூறினார்.
1971-ம் ஆண்டு சேலத்தில் பெரியார் நடத்திய பேரணி ஒன்றில் ராமன், சீதை ஆகியோரின் நிர்வாண உருவங்களை எடுத்துச்சென்றதாகவும், செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்ததாகவும் ரஜினி தெரிவித்தார். அதை துக்ளக்கில் எழுதியபோது புத்தகம் பறிமுதல் செய்யப்பட்டது. கூடுதல் விலைக்கு மக்கள் வாங்கினார்கள் என்று ரஜினி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
பெரியார் பற்றி பொய்யான தகவலைப் பரப்பி பெரியாரின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியதுடன், பொது அமைதியைக் குலைக்கும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார். அவர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்டத் தலைவர் உமாபதி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததையடுத்து சென்னை எழும்பூர் 2-வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் உமாபதி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ரோஸ்லின் துரை முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில், “துக்ளக் இதழில் ராமர், சீதை சிலைகள் நிர்வாணமாகக் கொண்டு சென்றது தொடர்பாக எந்தப் புகைப்பட ஆதாரமும் இல்லை. 50 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம் குறித்து தன்னுடைய அரசியல் லாபத்திற்காக ரஜினிகாந்த் பேசி வன்முறையைத் தூண்டி விடுகிறார்.
வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், மத உணர்வுகளைத் தூண்டி பெரியாரின் பெயருக்குக் களங்கம் விளைவித்து வன்முறையைத் தூண்டிய நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்” என வாதிடப்பட்டது .
இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பளித்த 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரோஸ்லின் துரை, ரஜினிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.
பெரியார் பற்றி பேசிய கருத்து அவதூறு என மனுதாரர் கருதினால் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடரலாம் என மாஜிஸ்திரேட் உத்தரவில் கருத்து தெரிவித்துள்ளார். இந்நிலையில் மனுவைத் தள்ளுபடி செய்த எழும்பூர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் மேல்முறையீடு செய்ய உள்ளது.