மாநிலங்களவை எம்.பி. சீட் ஒதுக்கீட்டில் எவ்வித குழப்பமும் இல்லை. எம்.பி. சீட்டை வாசனுக்குக் கொடுத்ததால் தேமுதிக அதிருப்தியிலும் இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டியில் இன்று அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "மாநிலங்களவை உறுப்பினர் பதவி தருவதாகக் கடந்த மக்களவை தேர்தலின்போது பாமகவுடன் ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. அதன்படி அவர்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தரப்பட்டுள்ளது.
அதன் பின்னர், எம்.பி. சீட்டை இவர்களுக்குத்தான் கொடுப்போம் என்று எந்த ஒப்பந்தமும் இல்லை. அதனால், மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளரை தமிழக முதல்வரும், துணை முதல்வரும் முடிவெடுத்துள்ளனர்.
இதில் வேற எந்த குழப்பமும் இல்லை. பத்திரிகைகள்தான் இதனைப் பெரிதுபடுத்தி வருகின்றன. தேமுதிக அதிருப்தியில் இல்லை. அப்படி எதுவும் இருந்தால் கட்சித் தலைமை அவர்களை அழைத்து பேசிக்கொள்வார்கள்.
இந்தியன் திரைப்பட படப்பிடிப்பில் நடந்த விபத்தை கமல்ஹாசன் கூறியதைப் போல அனைவரும் ஒரு பாடமாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். இதுபோன்ற விபத்து மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்கு திரைப்பட கவுன்சிலை அழைத்து நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம்.
இதுதொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் திரைப்பட தொழிலில் ஈடுபட்டவர்கள், படப்பிடிப்பு குழுவினர் உள்ளிட்டவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு விரைவில் அரசு ஏற்பாடு செய்ய உள்ளது.
ஏற்கெனவே நாங்கள் பேச்சுவார்த்தைநடத்திக் கொண்டிருக்கிறோம். இதில் நல்ல முடிவு எட்டப்படும்" என்றார்.