கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தவிர்த்தார்.
வசந்தகாலத்தை வரவேற்கும் விதமாக ஹோலி பண்டிகை கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றன. வழக்கமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகளை பூசியும் நடனமாடியும் உற்சாகமாகக் கொண்டாடுவது வழக்கம்.
புதுச்சேரியில் பல உயர் அதிகாரிகள் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஹோலி இங்கு பிரபலம். துணைநிலை ஆளுநராக கிரண்பேடி பொறுப்பேற்றது முதல் ஹோலியைக் கொண்டாடி வருகிறார்.
தற்போது கரோனா வைரஸ் தொடர்பான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் சூழலில், ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸில் இரு வார காலத்துக்கு குறை கேட்கும் நிகழ்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இச்சூழலில் இன்று (மார்ச் 10) காலை தனது வாட்ஸ் அப்பில் ஹோலி பண்டிகை கொண்டாடிய வீடியோக்களை கிரண்பேடி பகிர்ந்திருந்தார்.
அதில், கிரண்பேடி மீது பூக்கள் கொட்டப்படுவதும், அவரும் அருகே இருக்கும் அதிகாரிகள் மீது பூக்களைத் தூவுவதும் ஒரு வீடியோவில் இடம் பெற்றிருந்தது. மற்றொரு வீடியோவில் போலீஸார், அதிகாரிகள், பணியாளர்கள் ஆகியோர் அவர் மீது பூக்களைக் கொட்ட, அவரும் பதிலுக்கு அவர்கள் மீது பூக்களைத் தூவுவதும், ஆசி வழங்குவதும் இடம் பெற்றிருந்தன. அதன் கீழே "இதுவும் ஹோலிதான். மதிப்பு வாய்ந்த தண்ணீரை இம்முறையில் சேமிக்கலாம்" என்று கிரண்பேடி பதிவிட்டிருந்தார்.
ஏராளமான மலர்களைக் கொட்டுவது போன்று கிரண்பேடி பகிர்ந்த வீடியோ வைரலானதால், பூக்களைக் கொட்டி வீடியோ பதிவு தொடர்பாக ராஜ்நிவாஸ் வட்டாரங்களில் விசாரித்தபோது, "இது பழைய வீடியோ. ஹோலி பண்டிகையை முன்னிட்டு துணைநிலை ஆளுநர் பகிர்ந்துள்ளார்" என்று தெரிவித்தனர்.
கரோனா அச்சம் காரணமாக, ஹோலி கொண்டாட்டத்தை இந்த ஆண்டு கிரண்பேடி தவிர்த்துவிட்டார்.