நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளிலும் தங்கியுள்ள வெளிநாட்டினர் குறித்து கண்காணித்து கணக்கெடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ் தெரிவித்தார்.
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்து அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் ஆட்சியர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்து நிர்வாகத்தினர், ஹோட்டல்கள், திரையரங்கங்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், பள்ளி நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பினர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ் நெல்லை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொடர்பான பாதிப்புகள் இல்லை எனவும் தொடர்ந்து முன்னெச்சரிக்கை பணிகள் நடந்து வருவதாகவும் மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்கள், திரையரங்குகள் மக்கள் கூடுமிடங்கள் ஆகியவை சுத்தமாக வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலுக்கென தனி அறை திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் காய்ச்சல், இருமல் உள்ளிட்ட தொந்தரவுகள் இருப்போர் மருந்தகங்களில் தாமாக மருந்துகள் வாங்கி உட்கொள்ள வேண்டாம் எனவும் கேட்டுகொண்டுள்ளார்.
மேலும் நெல்லை மாவட்டத்தில் தங்கும் விடுதிகளில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் குறித்து கணக்கெடுத்து அவர்கள் சென்று வந்த நாடுகள் குறித்து தகவலை எடுப்பதோடு தீவிர கண்காணிப்பும் நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.
கேரள மாநிலத்தில் பறவைகாய்ச்சலால் போன்ற சம்பவங்களால் உயிரிழக்கும் கோழிகள் மற்றும் கோழி க்கழிவுகளை மாவட்ட எல்லையில் கொட்டுவதைத் தடுக்க காவல் கிணறு பகுதியில் சோதனை சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பு நடப்பதாகவும் கோழிக் கழிவுகளை கொண்டு கொட்டும் நபர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்பட்டுவருவதாக தெரிவித்தார்.