மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கோவிட்-19 காய்ச்சல் அறிகுறியுடன் இளைஞர் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சீனாவை அச்சுறுத்திய கோவிட்-19 காய்ச்சல் இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் இத்தாலியில் இருந்து நேற்று மதுரை வந்த 35 வயது இளைஞர் ஒருவருக்கு கோவிட்-19 காய்ச்சல் அறிகுறி இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. உடனே அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கோவிட்-19 காய்ச்சல் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு மருத்துவர்கள் அவரது ரத்த மாதிரியை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பினர். அவ ரிடத்தில் மருத்துவக் குழுவினர் சிகிச்சையும், தொடர் கண்காணிப்பும் மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்து ‘டீன்’ சங்குமணி கூறும்போது, ‘‘மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞருக்கு தொண்டை வலி மட்டுமே உள்ளது. சளி, இருமல் கூட இல்லை. ஆனாலும் கோவிட்-19 காய்ச்சல் அறிகுறி இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரிலே சிகிச்சை அளிக்கிறோம். ரத்த மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்ப உள்ளோம்’’ என்றார்.
இத்தாலியில் இதுவரை 107 பேருக்கு இக்காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் அந்நாட்டில் 11 மாகாணங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது மதுரையில் கோவிட்-19 காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருப்பவருர் இத்தாலியில் இருந்து வந்துள்ளதால் அவரை மருத்துவர்கள் தனிமைப்படுத்தி தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர்.
கேரள இளைஞர்
கோவிட்-19 வைரஸ் அறிகுறிகளுடன் கேரள இளைஞர் ஒருவர் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த இளைஞர் மலேசியாவில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்துள்ளார். பின்னர், அங்கிருந்து கேரளா செல்ல திட்டமிட்ட அவர், உடல்நலக்குறைவு காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அவருக்கு ‘கோவிட்-19’ அறிகுறிகள் தென்பட்டதால் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு ‘ஸ்வாப்’ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, ஆய்வு மாதிரி சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
பின்னர், ஆம்புலன்ஸ் மூலமாக கோவை சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவரை தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.