தமிழகத்தில் உள்ள கலை பொக்கிஷங்களையும் புராதன சின்னங்களையும் ஒருபோதும் தமிழக அரசு மத்திய அரசுக்கு விட்டுக்கொடுக்காது என்று, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த ஆவடி மாநகராட்சியில் உள்ள 17 அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நேற்று (மார்ச் 9) பேரிச்சம்பழச் சாறு வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் பாண்டியராஜன் கலந்துகொண்டார். மேலும், ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்களை அமைச்சர் பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன், தமிழகத்தில் 39 ஆயிரம் கோயில்கள் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருவதாக கூறினார். மேலும், பழமையான கோயில்களை பராமரிக்க தமிழகத்தில் அதிக நிதி ஒதுக்கப்படுவதாகவும் அமைச்சர் பாண்டியராஜன் சுட்டிக்காட்டினார்.
"எடப்பாடி பழனிசாமி முதல்வராக வந்த பின்னர் புராதான சின்னங்கள், அருங்காட்சியகங்கள், அகழ்வைப்பகங்களுக்காக திமுகவில் இருந்ததை விட 10 மடங்கு கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதுவும் குறைவுதான். அதனை வைத்து என்ன செய்ய முடியுமோ அதனை நாங்கள் சிறப்பாக செய்து வருகிறோம்.
தமிழகத்தில் உள்ள கலை பொக்கிஷங்கள், பண்பாட்டு விழுமியங்களை மத்திய அரசிடம் கொடுத்து உரிமைகளை விடக்கூடிய அரசாங்கம் இது இல்லை. எந்தவொரு புராதான சின்னங்களும் மத்திய அரசிடம் கொடுக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை" என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.