ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கொண்டுவந்த சீர் வரிசைப் பொருட்கள் கிள்ளை தர்காவில் வைத்து சிறப்பு பாத்தியா ஓதப்பட்டது. 
தமிழகம்

ஸ்ரீமுஷ்ணம் மாசி மகத் திருவிழாவில் மத நல்லிணக்கம்: பூவராக சுவாமியை வரவேற்ற முஸ்லிம்கள்

செய்திப்பிரிவு

சிதம்பரம் அருகே உள்ள கிள்ளையில் நடைபெற்ற மாசி மகத் திருவிழாவில், மத நல்லிணக்கத்தோடு ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமியை இஸ்லாமியர்கள் வரவேற்று, சீர் வரிசைப் பொருட்களை அளித்தனர்.

சிதம்பரம் அருகே கிள்ளை முழக்குதுறையில் ஆண்டுதோறும் மாசிமகத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இதில் சிதம்பரம் பகுதியைச் சுற்றியுள்ள கோயில்களில் உள்ள உற்சவர்கள், குறிப்பாக வைணவ தலங்களில் முக்கியமானதான கருதப்படும் முஷ்ணம் பூவராக சுவாமி கோயிலில் இருந்து வரும் பூவராக சுவாமியின் உற்சவருக்கு தீர்த்தவாரி நடப்பது வழக்கம். இந்த தீர்த்தவாரியில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபடுவர் மேலும், தங்கள் மூதாதையருக்கு தர்ப்பணம் அளிப்பதும் உண்டு.

இந்த ஆண்டு மாசி மக தீர்த்தவாரிக்காக கிள்ளை முழக்குதுறைக்கு நேற்று பூவராக சுவாமி வந்தபோது, கிள்ளை தர்கா டிரஸ்டி சார்பில் அதன் தலைவர் சையது சாக்காப் மற்றும் டிரஸ்டி உறுப்பினர்கள், இஸ்லாமியர்கள் மேளதாளம் முழங்க பட்டு, பச்சரிசி, தேங்காய் - பழம் சீர் கொடுத்து வரவேற்றனர்.

தொடர்ந்து பூவராக சுவாமிக்காக கொண்டு வந்த நாட்டுச் சர்க்கரை, மாலை உள்ளிட்ட சீர்வரிசைப் பொருட்களை கிள்ளையில் உள்ள தர்காவில் வைத்து, பாத்தியா ஓதி அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது. இஸ்லாமியர்கள், கோயில் பட்டாச்சாரியர்கள் மற்றும் கிள்ளை ஊர் பொதுமக்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

மத நல்லிணக்கத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் இந்நிகழ்வு, கடந்த 300 ஆண்டுகளாக இந்தப் பகுதியில் நடந்து வருகிறது. இதுகுறித்து கிள்ளை தர்கா டிரஸ்டியின் தலைவர் சையது சாக்காப் கூறும்போது, "இந்து - இஸ்லாமிய ஒற்றுமை தொடர்ந்து பேணப்பட வேண்டும்; நாடு செழிக்க வேண்டும்; மக்கள் வளமுடன் வாழ வேண்டும் என்று வேண்டி எங்கள் முன்னோர் காலத்தில் இருந்து பூவராக சுவாமிக்கு இந்த வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. சுமார் 300 ஆண்டுகளுக்காக தொடர்ந்து நடந்து வருகிறது.

தர்கா டிஸ்டி சார்பில் தரப்படும் பட்டு, பச்சரிசி, தேங்காய் - பழம் ஆகிய சீர் பொருட்கள் பூவராக சுவாமிக்கு படையல் செய்யப்படும். அதுபோல பூவராக சுவாமி கொண்டு வந்த நாட்டுச் சர்க்கரை, மாலை உள்ளிட்ட சீர் பொருட்கள் கிள்ளையில் உள்ள தர்காவில் வைத்து பாத்தியா ஓதி அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படும். வரும் காலங்களிலும் இந்த இஸ்லாமிய - இந்து நல்லிணக்க நிகழ்வு நடைபெற வேண்டும்'' என்று கூறினார்.

SCROLL FOR NEXT