தமிழகம்

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட விதிமுறையில் திருத்தம் ரூ.1,000 செலுத்தி கணக்கு தொடங்கலாம்

செய்திப்பிரிவு

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் 2019-ன் விதிமுறைகள் திருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை செலுத்தி சேமிப்பு கணக்கு தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மத்திய அரசின் தேசிய சேமிப்பு நிறுவன மண்டல இயக்குநர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

மத்திய நிதியமைச்சகத்தின் தேசிய சேமிப்பு நிறுவனத்தின், சேமிப்பு திட்டங்களை அஞ்சல் துறை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களில் ஒன்றான மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் 2019-ன் விதிமுறைகள் திருத்தப்பட்டுள்ளன.

இதன்படி, மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு கணக்கு தொடங்க விரும்பும் மூத்த குடிமக்கள் 60 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும். 55 வயது அல்லது 60 வயதுக்கு குறைவாகவும் உள்ள பணி நிறைவு காரணமாக ஓய்வு பெற்றவர்கள், 50 வயது நிரம்பிய பாதுகாப்புத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் ஆகியோர் படிவம்-1-ஐ பூர்த்தி செய்து இந்தக் கணக்கை தொடங்கலாம்.

இந்த சேமிப்பு கணக்கில் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் அல்லது ரூ.15 லட்சம் வரை வைப்புத் தொகையாக செலுத்தி தொடங்கலாம். எனினும், ரூ.15 லட்சம் அல்லது பணி ஓய்வினால் பெற்ற பணப் பயன்கள் ஆகியவற்றில் எது குறைவோ, அந்த அளவுக்கான தொகை வரை மட்டுமே செலுத்தி கணக்குகளைத் தொடங்க இயலும்.

இந்தத் திட்டத்தின்கீழ் உள்ள வைப்புத் தொகைகளுக்கு அவ்வப்போது அறிவிக்கப்படும் விகிதங்களின்படி வட்டி வழங்கப்படும். சாதாரணமாக 5 ஆண்டு காலத்துக்குப் பின் கணக்குகள் முடிக்கப்படும். ஆனால், படிவம்-4 மூலம் கணக்கு மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டிருந்தால், 8 ஆண்டுகளுக்குப் பிறகு கணக்கு முடிக்கப்படும்.

எனினும், கணக்கு வைத்திருப்பவர் மரணம் அடைய நேரிட்டால் கணக்கு உடனே முடிக்கப்பட்டு வைப்புத் தொகையும் வட்டியுமாக அவரது நியமனம் செய்யப்பட்ட நபர் அல்லது சட்டப்படியான வாரிசுக்கு வழங்கப்படும்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT