தமிழகம்

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் விழா: 8 கி.மீ. தூரத்துக்கு பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு

செய்திப்பிரிவு

எல்.மோகன்

திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில் ‘பெண்களின் சபரிமலை’ என போற்றப்படுகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பவுர்ணமியன்று நடைபெறும் பொங்கல் விழா மிகவும் சிறப்புபெற்றது. ஏற்கெனவே, இவ்விழாவில் லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்த நிகழ்வு, கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

நடப்பாண்டுக்கான பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. பொங்கலிட இடம்பிடிப்பதற்காக நேற்று முன்தினம் இரவில் இருந்தே பெண்கள் குடும்பத்துடன் திருவனந்தபுரத்தில் குவிந்தனர். ஆற்றுக்கால் கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பண்டார அடுப்பில், நேற்று காலை 9.45 மணிக்கு கோயில் பூசாரி தீமூட்ட, அதைத்தொடர்ந்து பெண்கள் தயாராக வைத்திருந்த அடுப்புகளில் தீமூட்டி பொங்கலிட்டனர்.

ஆற்றுக்கால் கோயில் அமைந்துள்ள கோட்டை பகுதியில் இருந்து, திருவனந்தபுரம் நகர்ப்பகுதி மற்றும் கோயில் சுற்றுப்புற பகுதிகள் என, சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு லட்சக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். அப்போது, ‘ஆற்றுக்கால் பகவதி அம்மே... சரணம்’ என அவர்கள் பக்தி கோஷம் எழுப்பினர்.

கோவிட் 19 வைரஸ் காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிநாட்டில் இருந்துவருவோர் மற்றும் சளி, இருமல்,காய்ச்சல் இருப்பவர்கள் யாரும்விழாவில் பங்கேற்க வேண்டாம்’என, மருத்துவக் குழுவினர் அறிவுறுத்தினர். பெண்கள் சிலர் முகத்தில் முகமூடி அணிந்தபடி பொங்கல் வைத்தனர். வெளிநாட்டில் இருந்து வந்த சிலர், கோவிட்19 வைரஸ் காய்ச்சல் எச்சரிக்கையால், அவர்கள் தங்கியிருந்த விடுதிகளிலேயே பொங்கலிட்டனர்.

பொங்கலிடும் நிகழ்ச்சி மதியம் 2 மணி வரை நடைபெற்றது. அதன் பின்னர் ஆற்றுக்கால் அம்மனுக்கு பொங்கல் படைக்கப்பட்டு பக்தர்களுக்கு நைவேத்தியம் வழங்கப்பட்டது. இரவு சிறுவர்களுக்கான குத்தியோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், கோயிலுக்குள் ஆற்றுக்கால் பகவதி தேவி எழுந்தருளும், பக்தர்கள் காப்பு அவிழ்த்தலும் நடைபெற்றது.

SCROLL FOR NEXT