ராமதாஸ்: கோப்புப்படம் 
தமிழகம்

கரோனா அச்சம்; எகிப்து நாட்டில் தவிக்கும் சுற்றுலாப் பயணிகளை மீட்க வேண்டும்: ராமதாஸ்

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் அச்சத்தால் எகிப்து நாட்டில் தவித்து வரும் தமிழக பயணிகளை மீட்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

எகிப்து நாட்டுக்குச் சுற்றுலா சென்ற 'சாரா' என்கிற பயணிகள் கப்பலில் 33 பயணிகள், 12 கப்பல் சிப்பந்திகளுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இக்கப்பல் லக்ஸர் நகரில் நைல் நதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதில் 18 தமிழர்களும் உள்ளனர்.

இவர்கள் சேலத்தில் உள்ள ஒரு தனியார் சுற்றுலா நிறுவனம் மூலம் சுற்றுலா சென்றவர்கள். இவர்கள் தங்கள் பயணத் திட்டப்படி கடந்த மாதம் 27-ம் தேதி புறப்பட்டு நேற்று முன்தினம் இந்தியா திரும்பி வருவதாக இருந்தது. ஆனால், தற்போது நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதில், சென்னையைச் சேர்ந்த பொறியாளர் ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அலெக்சாண்ட்ரியா துறைமுகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதையடுத்து, 18 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தங்களை மீட்டு இந்தியா திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (மார்ச் 9) தன் ட்விட்டர் பக்கத்தில், "எகிப்து நாட்டின் லக்ஸர் நகர் அருகே நைல் ஆற்றில் கரோனா அச்சம் காரணமாக தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசுக் கப்பலில் தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த பயணிகள் உடனடியாக மீட்கப்பட வேண்டும். அதுவரை அவர்களுக்கு உணவு, மருத்துவ வசதிகள் வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்!

எகிப்தில் சொகுசுக் கப்பலில் பயணித்து, கரோனா வைரஸ் அறிகுறிகளுடன் அலெக்ஸாண்ட்ரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சென்னையைச் சேர்ந்த பொறியாளருக்கு சிறப்பான மருத்துவம் அளிக்கப்பட வேண்டும். கப்பலில் தவிக்கும் தமிழக பயணிகளின் அச்சம் போக்கப்பட வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT