தமிழகம்

மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவராக பொன்னையன் நியமனம்

செய்திப்பிரிவு

மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவராக பொன்னையன் நியமிக்கப்பட்டுள்ளார். இது கேபினட் அந்தஸ்துக்கு இணையான பொறுப்பாகும். ஏற்கெனவே நிதி அமைச்சர் உள்ளிட்ட பல பொறுப்புகளில் இருந்து அனுபவம் பெற்றவர் என்பதால் இப்பதவிக்கு பொன்னையன் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான ரேஸில் இருந்தவர்களில் பொன்னையனும் ஒருவர். அண்ணா காலத்தில் மாணவர் அமைப்பின் மூலம் திமுகவில் செயல்பட்டவர். சட்டம் பயின்ற பொன்னையன், எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கிய காலத்தில் அவருடன் சேர்ந்து அதிமுகவுக்கு வந்தவர்.

எம்ஜிஆரிடம் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். எம்ஜிஆர் 1977-ல் ஆட்சியைப் பிடித்தபோது பொன்னையன் அமைச்சரானார். மூன்று தேர்தல்களில் திருச்செங்கோடு தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பொன்னையன் எம்ஜிஆர் மறையும்வரை அவரது அமைச்சரவையில் போக்குவரத்து, கல்வி, சட்டம் உள்ளிட்ட பல பொறுப்புகளில் அமைச்சராக விளங்கினார்.

நுணுக்கமான அறிவுக்குச் சொந்தக்காரர் என பொன்னையனைக் கூறுவார்கள். பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு இருந்த அதே அளவு மரியாதை பொன்னையனுக்கும் அப்போது அதிமுகவில் இருந்தது. பின்னர் ஜெயலலிதா முதல்வரானபோது பொன்னையன் சசிகலா குரூப்புக்கு ஆகாதவராக ஆனதால் ஓரங்கட்டப்பட்டார்.

பத்தாண்டுகள் கழித்து 2001-06 ஆம் காலகட்டத்தில் அதிமுக வென்றபோது பொன்னையனுக்கு நிதியமைச்சர் பொறுப்பை ஜெயலலிதா அளித்தார். அதுமுதல் பொன்னையன் மீண்டும் அரசியல் களத்துக்கு வந்தார்.

பின்னர் அவர் 2006 தேர்தலில் தோல்வியுற்றார். அதன் பின்னர் அவரை அவைத் தலைவராக்கினார் ஜெயலலிதா. பின்பு பொன்னையனின் பதவி பறிக்கப்பட்டது. 2011-க்குப் பிறகு அவருக்கு அரசியல் ஆலோசகர் பதவி அளித்து முக்கியமான இடத்தில் வைத்திருந்தார் ஜெயலலிதா.

2016-ல் மீண்டும் அவருக்கு வாய்ப்பளித்தார் ஜெயலலிதா. இம்முறை திமுகவின் கோட்டையான சைதாப்பேட்டையில் நிற்கவைத்தார். வென்றால் அமைச்சராகும் நிலையில் தோல்வி அடைந்தார் பொன்னையன்.

ஜெயலலிதா மறையும் முன்பு, ''காலையில் இரண்டு இட்லி சாப்பிட்டார்'' எனப் பேட்டி அளித்ததன் மூலம் சமூக வலைதளங்களில் மிகப் பிரபலமானார். பின்னர் ஓபிஎஸ் தனி அணி கண்டபோது திடீரென அவருடன் இணைந்தார்.

மீண்டும் கட்சி இணைந்தபோது பொன்னையனுக்கு உரிய இடம் கிடைக்கவில்லை. மாநிலங்களவை எம்.பி. பதவி கிடைக்கும் என எதிர்ப்பார்த்திருந்தார். ஆனால், கிடைக்கவில்லை. இந்நிலையில் தமாகா தலைவர் ஜி.கே.வாசனுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி க்கான வாய்ப்பு அளித்ததால் பொன்னையனைச் சரிகட்ட அவருக்கு மிக முக்கியமான கேபினட் அந்தஸ்துக்கு இணையான மாநில திட்டக்குழு துணைத்தலைவர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

பொன்னையன் எப்போதும் அரசியல் வியூகம் வகுப்பதில் நிபுணத்துவம் பெற்றவர். 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தால் வெல்லவே முடியாது என கடுமையாக ஆட்சேபத்தை தெரிவித்தவர்களில் பொன்னையனும் ஒருவர். தேமுதிக, பாமகவுடன் மட்டும் கூட்டணி வைப்போம் என்று தெரிவித்திருந்தார். பின்னர் பாஜக, பாமக, தேமுதிக என அணி அமைந்தது.

SCROLL FOR NEXT