தமிழகம்

தேர்தலில் அதிமுக தன்னை தற்காத்துக் கொள்ள வேண்டுமானால் பாஜக உறவை மறுபரிசீலனை செய்யவேண்டும்: தொல். திருமாவளவன்

செய்திப்பிரிவு

எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க தன்னை தற்காத்து கொள்ள வேண்டுமானால் பாஜகவுடனான உறவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் தமுமுக சார்பாக குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மாநாடு நேற்று மாலை நடைபெற்றது. மாநாட்டிற்கு ராமநாதபுரம் மாவட்ட தமுமுக தலைவர் முகமது இக்பால் தலைமை தாங்கினார்.

தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், மதுரை எம்.பி வெங்கடேசன், ராமநாதபுரம் எம்.பி நவாஸ் கனி, காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் கலந்து கொண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன உரையாற்றினர்.

இந்த மாநாட்டில் ஜவாஹிருல்லாவின் சட்டமன்ற பணிகள் குறித்து அவருடன் நேர்முக உதவியாளராக இருந்து பணியாற்றிய செ.தாஹிர் சைஃபுதீன் எழுதிய "இவர்தான் எம்.எல்.ஏ" என்ற நூல் வெளியிடப்பட்டது. நூலை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட ராமநாதபுரம் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி பெற்றுக் கொண்டார்.

மாநாட்டில் தொல். திருமாவளவன் பேசியதாவது:

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு,தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து இந்தியா முழுவதும் முஸ்லிம்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும், ஜனநாயக சக்திகளும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

எனவே மத்திய அரசு மக்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான குடியுரிமை சட்டம், மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை நடைமுறைபடுத்தாமல் திரும்ப பெற வேண்டும்.

டெல்லியில் நடைபெற்ற கலவரத்திற்கு உள்துறை அமைச்சா் அமித்ஷா பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என மார்ச் 2 முதல் மார்ச் 7 வரையிலும் நடைபெற்ற மக்களவை மற்றும் மாநிலங்களவைகளில் எதிர் கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளோம்.

டெல்லி வன்முறை குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும் என ஒத்திவைப்பு தீா்மானம் வழங்கினோம். ஆனால் மக்களவைத் தலைவா் அதை ஏற்கவில்லை. இதனால் மக்களவை கடந்த வாரம் முடங்கியது. மார்ச் 11 அன்று தொடங்க உள்ள மக்களவை கூட்டத்தில் டெல்லி கலவரம் குறித்து விவாதிக்க வேண்டும்.

எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க., தன்னை தற்காத்துக் கொள்ள வேண்டுமானால் பா.ஜ.க, உறவை மறுபரிசீலனை செய்யவேண்டும்.

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு,தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியச் சட்டங்களை ஆதரிப்பதை அதிமுக கைவிடவேண்டும். இந்த சட்டங்களை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று துணிந்து முடிவெடுக்க வேண்டும்.

சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், என்றார் தொல் திருமாவளவன்.

மாநாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த முஸ்லிம்கள் மற்றும் தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சியினர், மனிதநேய மக்கள் கட்சியின் தொண்டர்களும் மற்றும் அதிக அளவில் பெண்கள் கலந்து கொண்டனர்.

எஸ். முஹம்மது ராஃபி

SCROLL FOR NEXT