மகளிருக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (மார்ச் 9) வெளியிட்ட அறிக்கையில், "அனைத்து அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள், தனியார், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் மகளிர் தினத்தைக் கொண்டாடும் அதேவேளையில் அவர்களின் சுதந்திரமான, பாதுகாப்பான வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
பெண்கள் தினத்தை கொண்டாட வேண்டும். அவர்களின் உரிமைகள், பாதுகாப்புகள் பாதுகாக்கப்பட வேண்டும். பெண்கள் நம் நாட்டின் வளர்ச்சிக்கும், உறுதிக்கும் மன உறுதியோடு செயல்படுகிறார்கள். எனவே, மத்திய, மாநில அரசுகள், நீதித்துறை, காவல்துறை உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பெண் இனத்திற்கு ஆதரவாக, உதவிக்கரமாக, பாதுகாப்பு அரணாக விளங்க வேண்டும்.
2012 ஆம் ஆண்டில் நிர்பயா என்ற மருத்துவ மாணவி டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்தார். இக்கொலை வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்ற வேளையில் 4 குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற உத்தரவும் பிறக்கப்பட்டது. ஆனால், சட்டத்தில் வழிமுறைகள் இருக்கின்றது என்ற காரணத்தால் தண்டனையானது தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. இது ஒருபோதும் ஏற்புடையதல்ல.
அதாவது, இந்த கொடியவர்களுக்கு எவரும் எத்துறையும் எக்காரணத்திற்காகவும் தயவு தாட்சணை காட்டவோ, கருணை அளிக்கவோ, ஆதரவாக குரல் கொடுக்கவோ கூடாது. காரணம் ஒரு பெண்ணை மிகவும் கொடூரமான முறையில் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கி இறந்து போகின்ற அளவுக்கு மோசமான செயலில் ஈடுபட்ட பாவிகள். இவர்களுக்கு நீதிமன்றம் முதல் முறையாக தூக்கு தண்டனையை நிறைவேற்ற உத்தரவு பிறப்பித்தபோதே அத்தண்டனையை நிறைவேற்றி இருக்க வேண்டும்.
ஆனால், காலம் கடந்தும் 3 முறை அக்குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற முடியாமல் போனது வேதனையானது. இதற்கெல்லாம் காரணம் சட்ட வாய்ப்புகள் என்றாலும் அதற்கான வாய்ப்புகள் முடிவுற்ற நிலையில் 4 ஆவது முறையாக வருகின்ற 20 ஆம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதாவது நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேருக்கு தற்போது தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டு இறுதித்தீர்ப்பாக நீதிமன்றத்தால் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, நிர்பயா கொலை வழக்கில் துக்கு தண்டனை கைதிகளுக்கு வருகின்ற 20 ஆம் தேதியாவது நீதிமன்ற உத்தரவுப்படி உறுதியாக தண்டனை கிடைப்பதன் மூலம் இனிவரும் காலங்களில் மகளிருக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.
எனவே, சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடுவதோடு அவர்களுக்கான சுதந்திரமான, பாதுகாப்பான வாழ்வுக்கு இந்தியர்கள் உறுதுணையாக இருப்போம்" என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.