கவிஞர் காமகோடியன் எழுதிய ‘மெல்லிசை மன்னர் எம்எஸ்வியும் நானும்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்நூலை தொழிலதிபர் நல்லிகுப்புசாமி வெளியிட, திரைப்படஇயக்குநர் எஸ்பி.முத்துராமனும், எடிட்டர் மோகனும் பெற்றுக்கொண்டனர்.
நல்லி குப்புசாமி தனது தலைமை உரையில், ‘‘எம்எஸ்வியுடன் கவிஞர் காமகோடியன் 25 ஆண்டுகாலம் இணைந்து பணியாற்றியகாலகட்டத்தில் நடந்த இனிமையான பல சம்பவங்களின் தொகுப்பாக இந்நூல் வந்திருக்கிறது. அவர்கள் இருவருக்கும் இடையிலான அன்பின் பொக்கிஷமாக இந்த நூல் திகழ்கிறது.’’ என்றார்.
மெல்லிசை மன்னர் ரசிகர்அமைப்பைச் சேர்ந்த வி.பாலசுப்பிரமணியன் பேசும்போது, ‘‘அழகான தமிழில் அன்பு, பண்பு, பணிவுதான் இந்நூலின் அடிநீரோட்டமாக இருக்கிறது. 1960-களிலேயே எம்எஸ்விரசிகர் மன்றத்தை மதுரையில்தொடங்கியவர் காமகோடியன்.
அந்நாளிலேயே இசையமைப்பாளருக்கு ரசிகர் மன்றம் தொடங்கியதை ஓர் உலக சாதனை என்றுதான் சொல்லவேண்டும். மெல்லிசை மன்னர் எங்கு கச்சேரி செய்தாலும், ‘அறிஞனாக இரு’ என்று தொடங்கி ‘மனிதனாக இரு’ என்று முடியும் கவிஞர் காமகோடியனின் வரிகளை விருத்தமாகப் பாடி, இதை எழுதியவர் கவிஞர் காமகோடியன் என்றும் அறிவிப்பார். கவிஞர் - இசையமைப்பாளர் இடையிலான அனுபவப் பகிர்வு நூல் முழுவதும் விரவியிருக்கிறது.
ஒருகட்டத்தில் அந்தஅனுபவப் பகிர்வு, படிப்பவர்களையும் தொற்றிக் கொள்ளும் ரசவாதத்தையும் இப்புத்தகம் செய்கிறது’’ என்றார்.
‘‘மெல்லிசை மன்னரிடம் காமகோடியனை அறிமுகம் செய்ததே நான்தான்’’ என்று எடிட்டர் மோகன் பெருமிதத்துடன் கூறினார். ‘‘எம்ஜிஆர், கண்ணதாசன் போன்றவர்களின் பாராட்டுகளை பெற்றவர் காமகோடியன். அது தமிழகமே பாராட்டியதற்கு சமம்’’ என்று குறிப்பிட்டார் நடிகர் ராஜேஷ்.
இசையமைப்பாளர் தேவா, பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் ஆகியோர் காமகோடியனை வாழ்த்திப் பேசினர். முன்னதாக, எம்எஸ்வியின் உதவியாளர் அனந்துவின் இசை நிகழ்ச்சி நடந்தது.
கவிஞர் காமகோடியன் தனது ஏற்புரையில், ‘‘மெல்லிசை மன்னர் குழந்தை போன்றவர் என்று பலரும் சொன்னார்கள். அது உண்மைதான். ஒரு அம்சமான வார்த்தை பாடலில் வந்துவிட்டால் போதும்.. என் கன்னத்தை கிள்ளி, ‘‘கவிஞர்யா!’’ என்று புகழ்வார்’’ என்று நினைவுகூர்ந்தார். நிறைவாக, பதிப்பாளர் வானதி ராமநாதன் நன்றி கூறினார்.