திருவனந்தபுரம் மற்றும் மலேசியாவில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.67 லட்சம் மதிப்பிலான தங்கம் சென்னை விமான நிலையத்தில் நேற்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது.
இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். அப்போது திருவனந்தபுரத்தில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த முஜீப்தங்கல் (36) என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது உடைமைகளில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போத உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இவரிடம் ரூ.22.04 லட்சம் மதிப்புள்ள 495 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
இதேபோல், மலேசியாவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த மலேசியாவை சேர்ந்த அப்துல் சுபான்(33), முகமது சபீர் அலி(28) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் சுங்க துறை அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர். அப்போது ஆடைகளுக்குள் ரகசியமாக வைத்துதங்கத்தை கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 2 பேரிடம் இருந்து ரூ.44.91 லட்சம் மதிப்புள்ள 988 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
எனவே, 3 பேரிடம் இருந்து மொத்தம் ரூ.67.31 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ 483 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். பின்னர், அந்த 3 பேரையும் கைது செய்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.