திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். படம்: என்.ராஜேஷ் 
தமிழகம்

திருச்செந்தூர் கோயிலில் மாசித் திருவிழா தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

செய்திப்பிரிவு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசித்தனர்.

இக்கோயிலில் மாசித் திருவிழா கடந்த மாதம் 28-ம் தேதிகொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 10-ம்நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. அதிகாலை5 மணியளவில் கோயில் நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

காலை 6 மணியளவில் கும்பலக்னத்தில் தேரோட்டம் தொடங்கியது. முதலாவதாக காலை 6.05மணியளவில் விநாயகர் தேர்புறப்பட்டது. 4 ரத வீதிகளிலும் வலம் வந்து 6.50 மணியளவில் நிலைக்கு வந்தது. தொடர்ந்து காலை 7 மணியளவில் சுவாமி குமரவிடங்கப் பெருமான், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய பெரிய தேர் இழுக்கப்பட்டது.

4 ரதவீதிகளிலும் வலம் வந்து காலை 9 மணியளவில் தேர் நிலையை வந்தடைந்தது. நிறைவாக தெய்வானை அம்மன் தேர் காலை 9.15 மணியளவில் இழுக்கப்பட்டு, 10.25 மணியளவில் நிலைக்கு வந்தது.

முன்னதாக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ திருத்தேர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், சட்டப்பேரவை உறுப்பினர் பெ.சின்னப்பன், மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் பி.மோகன், கோயில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், செயல் அலுவலர் சா.ப.அம்ரித் உட்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். மாசித் திருவிழாவின் 11-ம் நாளான இன்று(மார்ச் 9) இரவு தெப்ப உற்சவம்நடைபெறுகிறது. நாளையுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.

SCROLL FOR NEXT