மாசி மகத்தையொட்டி கும்பகோணம் மகாமக குளத்தில் நேற்று புனித நீராடிய பக்தர்கள். 
தமிழகம்

கும்பகோணத்தில் மாசி மகத் திருவிழாவை முன்னிட்டு மகாமக குளத்தில் பக்தர்கள் புனித நீராடல்: பொற்றாமரை குளத்தில் தெப்ப உற்சவம்

செய்திப்பிரிவு

மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு கும்பகோணம் மகாமக குளத்தில் நேற்று தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

கும்பகோணம் மகாமக குளத்தில் ஆண்டுதோறும் மாசி மாதம் மக நட்சத்திரத்தன்று மாசி மக விழாவாகவும், இதேவிழா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறைமகாமக விழாவாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழாண்டு மாசிமகவிழாவை முன்னிட்டு கடந்த பிப்.28-ம்தேதி முதல் ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், கவுதமேஸ்வரர், வியாழசோமேஸ்வரர் உள்ளிட்ட 6 சிவாலயங்களில் 10 நாள் உற்சவம் நடைபெற்றது. மீதமுள்ள பாணபுரீஸ்வரர், கம்பட்ட விஸ்வநாதர், கொட்டையூர் கோடீஸ்வரர், சாக்கோட்டை அமிர்தகலசநாதர், ஏகாம்ப ரேஸ்வரர், நாகேஸ்வரர் ஆகிய 6 சிவன்கோயில்களில் மாசி மகத்தன்று (நேற்று) மட்டும் ஏகதின உற்சவமாக கொண்டாடப்பட்டது.

பஞ்சமூர்த்திகள்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று காலை ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர் உள்ளிட்ட 12 சிவன் கோயில்களில் இருந்து சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பட்டு ரிஷப வாகனங்களில் மகாமக குளத்தின் 4 கரைகளிலும் எழுந்தருளினர்.

பின்னர் அந்தந்தக் கோயிலின் அஸ்திர தேவர்களுக்கு 21 வகையானபொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன்பின், அஸ்திரதேவர்கள் மகாமக குளத்தில் நீராடியதை தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். கும்பகோணம் சக்கரபாணி கோயிலில் மாசி மக விழா கடந்த பிப்.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

உற்சவத்தின் முக்கிய நாளான நேற்று காலை சுதர்சனவல்லி, விஜயவல்லி தாயாருடன் சக்கரபாணி சுவாமி அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். பின்னர் காலை 8.30 மணியளவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர்.

தெப்ப உற்சவம்

இதேபோல, கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலில் மாசி மகத்தை முன்னிட்டு 5 நாட்கள் கோயிலுக்குள் உள்புறப்பாடு நடைபெற்றது. இறுதி நாளான நேற்று, கோயிலின் பின்புறமுள்ள பொற்றாமரை குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதையடுத்து நேற்று அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் தேவி, பூதேவியுடன் சாரங்கபாணி சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

ஆதிவராக குளத்தில் தீர்த்தவாரி

கும்பகோணம் ஆதிவராக பெருமாள் கோயில் வராக குளத்தில் நேற்று தீர்த்தவாரி நடைபெற்றது. இதை முன்னிட்டு குளத்தில் உள்ள தீர்த்தவாரி மண்டபத்தில் அம்புஜவல்லி தாயாருடன், ஆதிவராக பெருமாள் காட்சியளித்தார். தொடர்ந்து சின்ன பெருமாள் (எ) தீர்த்தபேரருக்கு, 21 வகையான மங்கள பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT