தமிழகம்

மக்கள் அச்சப்பட வேண்டாம் என அரசு வேண்டுகோள்; தமிழகத்தில் மேலும் 2 பேருக்கு கோவிட்-19 வைரஸ் அறிகுறி: தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை

செய்திப்பிரிவு

வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வந்த சிறுவன் மற்றும் ரயில்வே ஊழியர் ஆகிய 2 பேருக்கு கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கோவிட்-19 வைரஸ் பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

இந்தியாவில் 39 பேருக்கு கோவிட்-19 வைரஸ் பாதிப்பு இருப்பதுபரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து சென்னை வந்த பொறியாளருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால், அவர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையில், அவரது மனைவியும் இதே மருத்துவமனையில் டாக்டர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

சென்னை, திருச்சி, மதுரை, கோவை விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவரையும் மருத்துவக் குழுவினர் தீவிரமாக பரிசோதனை செய்து வருகின்றனர்.

தேனியில் ஆய்வகம்

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோர் நேற்று கூறியதாவது:

தமிழகத்தில் இதுவரை 68 பேரின்ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன. அதில் 59 பேருக்கு பாதிப்புஇல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 8 பேரின் ரத்தப் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. ஓமனில் இருந்து வந்த காஞ்சிபுரம் பொறியாளருக்கு மட்டும் பாதிப்பு உள்ளது. அவர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரும் நலமுடன் இருக்கிறார். அவருடன் விமானத்தில்வந்த பயணிகள், தொடர்பில் இருந்தவர்கள், உறவினர்கள் உட்பட மொத்தம் 27 பேர் கண்டறியப்பட்டு, அவரவர் வீடுகளிலேயே கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

டாக்டர்களுக்கு விடுப்பு

ஏற்கெனவே, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் காஞ்சிபுரம் பொறியாளருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. வீட்டிலேயே அவர்கள்தனியாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டில் பணிபுரியும் மருத்துவக் குழுவினரும், தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் பழக வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். தேவையின்றி முகக் கவசங்கள் வாங்கி மாட்டிக் கொண்டு யாரையும் அச்சுறுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம். அந்த நிலைமை இன்னும் ஏற்படவில்லை. தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 300 படுக்கை வசதிகளுடன் கூடிய வார்டுகள் தயார் நிலையில் உள்ளன.

கோவிட்-19 வைரஸ் பாதிப்பை எதிர்கொள்வதற்கான போதிய மருத்துவக் கருவிகள், மருந்துகள், 10 லட்சம் முகக் கவசங்கள் உள்ளன. போதிய எண்ணிக்கையில் டாக்டர்களும் உள்ளனர். எனவே மக்கள் அச்சம் அடைய வேண்டாம்.

சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் போல, தேனியில் புதிய ஆய்வகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வெயில் அதிகம் இருந்தால் வைரஸ் பாதிப்பு ஏற்படாது என்பதற்கு ஆதாரப்பூர்வ நிரூபணம் இல்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அமெரிக்காவில் இருந்து தோகாவழியாக சென்னை வந்த 15 வயதுசிறுவனுக்கு கோவிட்-19 வைரஸ் அறிகுறிகள் இருப்பது நேற்று முன்தினம் இரவு தெரியவந்தது. இதையடுத்து, சென்னை அரசு பொது மருத்துவமனையின் சிறப்பு வார்டில் அவன் அனுமதிக்கப்பட்டான். அங்கு அவனுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அவனதுரத்த மாதிரி கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருத்துவத் துறை (டிபிஎச்) இயக்குநர் க.குழந்தைசாமியிடம் கேட்டபோது, ‘‘சென்னையைச் சேர்ந்த அந்த சிறுவனுக்கு அறிகுறிகள் இருந்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான். தற்போது நலமாக இருக்கிறான். கோவிட்-19 வைரஸ் பாதிப்பு இருக்கிறதா, இல்லையா என்பது பரிசோதனை முடிவில் தெரியவரும்” என்றார். பரிசோதனை முடிவு இன்று வர உள்ளது.

இதேபோல, நேபாளத்தில் இருந்துசென்னை வந்த ரயில்வே ஊழியருக்கும் காய்ச்சல், இருமல் என கோவிட்-19 வைரஸ் அறிகுறிகள்இருந்ததால், சென்னை பெரம்பூரில்உள்ள ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது ரத்தமாதிரியும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கோவிட்-19 வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் உடனான ஆலோசனைக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடக்க உள்ளது.

முதல்வர் ஆலோசனை

தமிழகத்தில் மேலும் 2 பேருக்கு கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடக்க உள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், துறை செயலர் பீலா ராஜேஷ், பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். கோவிட்-19 வைரஸ் பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படஉள்ளது.

SCROLL FOR NEXT