மோனிகா 
தமிழகம்

கோவை மாநகராட்சியில் துப்புரவுப் பணி வாய்ப்பு பெற்ற எம்.எஸ்சி. மாணவி

செய்திப்பிரிவு

கோவை மாநகராட்சியில் துப்புரவுப் பணிக்கான வேலைவாய்ப்பு உத்தரவு எம்.எஸ்சி. மாணவிக்கு வழங்கப்பட்டது.

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 2,520நிரந்தர துப்புரவுப் பணியாளர்களும், 2,308 ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர். காலியாக உள்ள 549 துப்புரவுப் பணியாளர் பணியிடங்களை நிரப்ப மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிடப்பட்டது

7,300 பேர் விண்ணப்பம்

இந்தப் பணிக்காக பி.எஸ்சி., பி.காம்., பி.இ. பட்டதாரிகள் உட்பட 7,300 பேர் விண்ணப்பித்திருந்தனர். நேர்காணலில் 5,200 பேர் பங்கேற்றனர். இட ஒதுக்கீட்டு அடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன.

இதையடுத்து, 321 துப்புரவுப் பணியாளர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி கோவை குனியமுத்தூரில் உள்ள தெற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஜடாவத் தலைமை வகித்தார். தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சிமற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துப்புரவுப் பணியாளர்களுக்கு வேலைநியமன உத்தரவை வழங்கினார்.

இதில், கோவை தெலுங்குபாளையத்தைச் சேர்ந்த,எம்.எஸ்சி. படித்து வரும் மாணவி மோனிகா(23)வுக்கும் துப்புரவுப் பணியாளர் பணிக்கான உத்தரவு வழங்கப்பட்டது.

இன்ப அதிர்ச்சி

இதுகுறித்து மோனிகா கூறும்போது, "படிப்புக்கும், செய்யும் பணிக்கும் சம்பந்தம் இல்லை. எந்த வேலையாக இருந்தாலும் செய்வேன். துப்புரவுப் பணியில்சேர ஆர்வமுடன் விண்ணப்பித்து, நேர்காணலில் பங்கேற்றேன். வேலை கிடைத்த தகவல் செல்போனில் தெரிவிக்கப்பட்ட போது, இன்ப அதிர்ச்சியாக இருந்தது" என்றார்.

SCROLL FOR NEXT