சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழம், சென்னை பச்சையப்பன் கல்லூரி என உயர் படிப்பை முடித்து, கல்லூரியில் பணியாற்றியவர் க.அன்பழகன். தமிழ், ஆங்கிலத்தில் புலமை மிக்கவர். கருணாநிதிக்கு முன்பே அண்ணாவிடம் நெருக்கமானவர். 1957-ல் சட்டப்பேரவை திமுக தலைவரான அண்ணா, துணைத் தலைவரான க.அன்பழகனுக்கு அடுத்த இடத்தில் கொறடாவாக இருந்தவர் கருணாநிதி. ஆனால், கருணாநிதி பள்ளிப் படிப்பைத் தாண்டாதவர். அண்ணாவின் இதயத்தில் கருணாநிதிக்கு இணை யான இடம் அன்பழகனுக்கும் இருந்தது. ஆனாலும் அண்ணாவுக்குப் பிறகு கருணாநிதியை தலைவராக ஏற்றுக் கொண்டார் அன்பழகன்.
அன்பழகனுக்கும் தனக்குமான நட்பு எங்கு தொடங்கியது என்பதைகருணாநிதியே பலமுறை பொதுமேடைகளில் பெருமிதத்துடன் பேசியிருக்கிறார். அண்ணாமலை பல்கலைக்கழக மாணவராக இருந்த அன்பழகனின் திறமையை உணர்ந்த அண்ணா, தான் செல்லும் இடங்களுக்கெல்லாம் அவரையும் அழைத்துச் சென்றார். மேடைகளில் பேச வைத்தார்.
1942-ம் ஆண்டு திருவாரூர் விஜயபுரத்தில் முஸ்லிம் இளைஞர்கள் நடத்திய விழாவில் அண்ணாவுடன் பங்கேற்ற அன்பழகன், அப்போது இளமை துடிப்புடன் இருந்த கருணாதியை முதன்முதலாகச் சந்தித்தார். அன்று தொடங்கிய நட்பு 2018-ல் கருணாநிதி மறையும் வரை 76 ஆண்டுகள் தொடர்ந்தது. கருணாநிதியின் இல்ல திருமணங்களை தலைமையேற்று நடத்தி வைக்கும் அளவுக்கு இருவருக்கும் இடையே மிக நெருங்கிய நட்பும், பரஸ்பர மரியாதையும் இருந்தது.
இருவரும் இணைந்து பங்கேற்கும் கூட்டங்களில் அன்பழகன் உடனான அனுபவங்களை பகிராமல் கருணாநிதி பேசியதே இல்லை."கருணாநிதி ஒரு கட்சியின் தலைவர் மட்டுமல்ல; அவர் திராவிட இயக்கத்தின், தமிழினத்தின், சமுதாயத்தின் தலைவர். அதனால்தான் வயதில் இளையவராக இருந்தாலும் அவரை தலைவராக ஏற்றேன்" என்று பலமுறை பேசியிருக்கிறார் அன்பழகன். பல நேரங்களில் அன்பழகனை காக்க வைக்கக் கூடாது என்பதற்காக, அவர்வருவதற்கு முன்பாகவே நிகழ்ச்சிக்கு வந்து விடுவார் கருணாநிதி.
2006 - 2011 காலகட்டத்தில் நிதி அமைச்சராக, கருணாநிதிக்கு அடுத்த இடத்தில் இருந்தார் அன்பழகன். சில ஆண்டுகளில் மு.க.ஸ்டாலின் துணை முதல்வரான பிறகும் அன்பழகனுக்கான இரண்டாம் இடத்தை கருணாநிதி மாற்றவில்லை. ஸ்டாலின் துணை முதல்வரானதும், தமிழக அரசின் இணையதளத்தில் கருணாநிதிக்கு அடு்த்தஇடத்தில் ஸ்டாலின் பெயர் இடம்பெற்றிருந்தது. இதை அறிந்ததும் சம்பந்தப்பட்டவர்களைக் கடிந்துகொண்ட கருணாநிதி, மகனுக்கு 3-வது இடத்தை கொடுத்து மனதுக்கு பிடித்த நண்பருக்கு 2-வது இடத்தை மீண்டும் அளித்தார்.
எம்ஜிஆர், அதிமுகவைத் தொடங்கியபோது திமுகவுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. திமுகவின் தூண்கள் என்று கருதப்பட்ட நெடுஞ்செழியன் போன்ற பலமுக்கியத் தலைவர்கள் அதிமுகவுக்குச் சென்றனர். ஆனால், அன்பழகன் மட்டும் கருணாநிதி உடனேயே இருந்தார். 1993-ல் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட வைகோ, மதிமுகவைத் தொடங்கினார். 9 மாவட்டச் செயலாளர்கள் வைகோவுடன் சென்றனர். கட்சி அலுவலகமான அண்ணா அறிவாலயமே பறிபோய்விடுமோ என்கிற அளவுக்கு பெரும் பிளவைதிமுக சந்தித்தது. அப்போதும் கருணாநிதிக்கு பக்கபலமாக இருந்தார். இதனால் இருவருக்குமான நட்பு மேலும் வலுப்பெற்றது.
அன்பழகனின் நீண்ட அரசியல் அனுபவத்தையும், அறிவையும் கருணாநிதி பயன்படுத்திக் கொண்டார். தேர்தல் கூட்டணி, பிரச்சார வியூகம், அரசியல் நெருக்கடி என எந்தச் சூழலிலும் அன்பழகனுடன் ஆலோசிக்காமல் அவர் எந்த முடிவையும் எடுத்தது இல்லை.
பாஜகவில் வாஜ்பாய் - அத்வானி இணை அக்கட்சியை இந்திய அரசியலில் உச்சத்துக்கு அழைத்துச் சென்றது. அதுபோல கருணாநிதி - அன்பழகன் இணையும் திமுகவை தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக மாற்றியுள்ளது. கருணாநிதிக்கு கடைசிவரை துணைநின்ற அன்பழகன், தனது 98-வது வயதில் மறைந்துள்ளார். அவரது மறைவு திமுகவுக்கு பேரிழப்பு என்பதில் சந்தேகம் இல்லை.