தமிழகம்

அதிமுக ஆட்சியின் முறைகேடு பட்டியல் நீண்டுகொண்டேசெல்கிறது: விஜயகாந்த்

செய்திப்பிரிவு

தாதுமணல், கிரானைட், ஆற்றுமணல் கொள்ளைகள் என அதிமுக ஆட்சியின் முறைகேடு பட்டியல் நீண்டுகொண்டேசெல்கிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்று சொல்கிறார். அதை அதிமுகவினரை மட்டுமே உள்ளடக்கிய வளர்ச்சி என்றுதான் சொல்லவேண்டும்.

ஏழரைகோடி மக்கள் வசிக்கின்ற தமிழ்நாட்டில் ஏழு பேருக்கு உதவிகளை வழங்கிவிட்டு, நாட்டு மக்கள் அனைவருக்கும் வழங்கியது போல் வாய்ச் சொல்லில் வீரம் காட்டும் முதலமைச்சரைதான் தமிழகம் பெற்றிருக்கிறது. ஏழைகளுக்கு அரசின்மூலம் வழங்கப்படும் இலவசக்கல்வி தரமில்லாததால், அதை கற்பவர்கள் உயர் கல்விக்கு செல்ல முடியாத நிலையும், அதனால் பல கல்லூரிகள் மூடும் நிலையும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டதாக கூறப்பட்டாலும், அங்கு தேவையான மருந்துகளோ, போதுமான மருத்துவர்களோ, செவிலியர்களோ இருப்பதில்லை. மருத்துவ காப்பீட்டு திட்டம் இருந்தால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம் என்ற நிலைமாறி, தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கே மருத்துவ காப்பீட்டு திட்டம் தேவை என்கின்ற நிர்பந்தமும் இந்த ஆட்சியில் ஏற்பட்டுள்ளது.

ஒருபுறம் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கிவிட்டு, மறுபுறம் டாஸ்மாக் மதுவால் பெண்களின் தாலியை பறிக்கும் செயல் குறித்து பேசவுமில்லை, அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் மனமில்லை. மின் உற்பத்தியை பெருக்கி இருக்கிறோம் என்று பச்சைபொய்யை மக்களிடத்திலே கூறிவருகிறார். ஒரு பொய்யை பலமுறை கூறினாலும் அது உண்மையாகாது. புதியதாக மின்னுற்பத்தி திட்டங்களை துவக்காமல், அதிக விலை கொடுத்து தனியாரிடத்தில் மின்சாரத்தை கொள்முதல் செய்வதால், தமிழக மின்வாரியம் ஒரு லட்சம் கோடிக்குமேல் கடனில் சிக்கித்தவிக்கிறது. ஆனாலும் தொடர்ந்து மின்வெட்டு தமிழகத்தில் இருக்கிறது என்பதுதான் உண்மை.

டெல்டா விவசாயத்திற்கு மேட்டூர் அணை திறந்துவிடப்பட்டும், கடைமடை பகுதிவரை தண்ணீர் வரவில்லை, குறுவை சாகுபடிக்குத்தான் தண்ணீர் இல்லை, சம்பா சாகுபடிக்காவது தண்ணீர் கிடைக்குமா? என விவசாயிகள் ஏங்கும்நிலையும், வேளாண்மைத்துறை, வீட்டுவசதித்துறை, மருத்துவத்துறை, வருவாய்த்துறை, உணவுத்துறை போன்ற துறைகளின் அதிகாரிகள் முதல் அரசு ஊழியர்கள்வரை பல்வேறு நிர்பந்தங்களால் மனஉளைச்சல் கொண்டு தற்கொலை செய்து கொள்வதும், வேலையை விட்டு செல்வதும் என்ற அவலநிலைதான் இன்றைய ஆட்சியில் உள்ளது.

பொதுப்பணித்துறையில் ஒப்பந்ததாரரிடம் துறை அதிகாரியே லஞ்சம் கேட்டதற்கான குற்றச்சாட்டை நிரூபிக்கும் செல்போன் பேச்சுக்கள், ஆவின்பால், நெல்கொள்முதல், பருப்பு கொள்முதல் ஆகியவற்றில் முறைகேடுகள், தாதுமணல், கிரானைட், ஆற்றுமணல் கொள்ளைகள் என இந்த அதிமுக ஆட்சியின் முறைகேடு பட்டியல் நீண்டுகொண்டேசெல்கிறது.

நிர்வாகத் திறமையற்ற அதிமுக அரசின் செயலற்ற தன்மையால், தமிழக மக்களின் அத்தியாவசிய தேவையான கல்வி, சுகாதாரம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, சாலைவசதி, வேலை வாய்ப்பு போன்றவை நிறைவேற்றப்படாமல் உள்ளது. மேலும், விவசாயம் பொய்த்துப்போவதும், நெசவுத்தொழில் நசிந்துபோவதும், தொழிற்சாலைகள் மூடப்படுவதும் போன்ற காரணங்களால் பொருளாதார வளர்ச்சி அதலபாதாளத்திற்கு சென்று, தினந்தோறும் தமிழகமெங்கும் மக்கள் போராட்டங்களை நடத்திவருகிறார்கள்.

ஆனால், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவோ முழுப்பூசணியை இலைச்சோற்றில் மறைக்க முயற்சித்து, அதை அதிமுக ஆட்சியின் சாதனை என கூறுகிறார். இதுவா சாதனை? தமிழகத்திற்கு நான்கு ஆண்டு காலமாக அதிமுக அரசு கொடுத்த வேதனையாகத்தான் பொதுமக்கள் இதைப்பார்க்கிறார்கள்.

அதிமுக ஆட்சிகாலம் தமிழகத்திற்கு சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என தமிழக மக்கள் எதிர்வரும் காலங்களில் ஆட்சியாளர்களுக்கு உணர்த்துவார்கள்'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT