தமிழகம்

ஓமனிலிருந்து சென்னை வந்த தமிழருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு; மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்- அச்சம் வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர் 

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பாதிப்புடன் ஓமன் நாட்டிலிருந்து தமிழர் ஒருவர் சென்னை வந்துள்ளதும், அவர் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதையும் தனது ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் பதிவிட்டுள்ளார்.

சீனா உள்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் கெரானா வைரஸ் நோய் பரவி பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான சீனா, தென் கொரியா, இத்தாலி உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் விசா தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

மேலும் இந்தியா முழுவதும் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. சென்னை விமான நிலையத்திற்கு விமானத்தில் வரும் பயணிகளை கண்காணிக்கவும் பரிசோதனை செய்யவும் பன்னாட்டு விமான நிலைய வருகை முனையத்தில் தனியாக மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

சென்னை விமான நிலையத்தில் செய்யப்பட்டு உள்ள ஏற்பாடுகள், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவற்றை தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று ஆய்வு செய்தார்.

சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நாளில் இருந்து சென்னை விமான நிலையம் உள்பட தமிழகத்தில் உள்ள 4 முக்கிய விமான நிலையங்களில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மத்திய அரசின் அறிவுரை பேரில் விமான நிலைய ஆணையகத்துடன் இணைந்து தமிழக பொது சுகாதார துறை டாக்டர்கள் பரிசோதனையை பலப்படுத்தப்பட்டு உள்ளது. நவீன கருவிகளுடன், கைகளை சுத்தம் செய்ய கூடிய கருவிகளும் வைக்கப்பட்டு உள்ளது.

தினமும் 52 விமானங்களில் 8500 பயணிகள் வருகின்றனர். தற்போது சீனா ஜப்பான், இத்தாலி, தென் கொரியா, ஈரான் போன்ற நாடுகளில் கரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளதால் அனைத்து விமானங்களிலும் பயணிகளும் கண்காணிக்கப்படுகின்றனர்.

இதுவரை விமான நிலையங்களில் 1 லட்சத்தி 111 பேரை பரிசோதிக்கப்பட்டுள்ளனர். 1243 பேரை தொடர்ந்து 28 நாட்களாக கண்காணித்து வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஓமன் நாட்டிலிருந்து தமிழகம் வந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்கிற தகவல் வெளியானது. இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இதை உறுதிப்படுத்தியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவு:

“ஓமனிலிருந்து சென்னை திரும்பிய 45 வயது நபருக்கு கரோனா (கோவிட் 19) பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். நோயாளி மருத்துவ சிகிச்சையில் நலமுடன் உள்ளார்.
தமிழக சுகாதாரத்துறை நிலைமையை சமாளிக்கும் வண்ணம் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் யாரும் பீதியடைய தேவையில்லை”.

இவ்வாறு விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT