தமிழகம்

நெல்லை வி.கே.புரம் பகுதியில் அட்டகாசத்தில் ஈடுபட்ட சிறுத்தை வனத்துறையின் கூண்டில் சிக்கியது

அ.அருள்தாசன்

திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் பகுதியில் அட்டகாசம் செய்துவந்த சிறுத்தை வனத்துறை வைத்திருந்த கூண்டில் சிக்கியது.

சுட்டெரிக்கும் வெயில் காரணமாக வனவிலங்குகள் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்துக்கு உணவு, தண்ணீர் தேடி வரத் தொடங்கியிருக்கின்றன.

கடந்த சில நாட்களுக்குமுன் வி.கே.புரம், டானா, அனவன்குடியிருப்பு பகுதிகளில் யானைக் கூட்டம் தென்னை மரங்களை சேதப்படுத்தியிருந்தது. இதுபோல் வி.கே.புரம் அருகே மலையடிவார கிராமமான திருப்பதியாபுரம் இந்திரா காலனியில் முருகன், பரமசிவன், ராஜா ஆகியோரது வீடுகளில் கட்டியிருந்த நாய்களை சிறுத்தை தூக்கிச் சென்றிருந்தது.

மேலும் மணிமுத்தாறு பேரூராட்சிக்கு உட்பட்ட வேம்பையாபுரம் மலையடிவாரத்தில் முப்பிடாதி என்பவருக்கு சொந்தமான ஆடு மற்றும் 2 குட்டிகளை சிறுத்தையொன்று கடித்து குதறியிருந்தது. இதுபோல் சண்முகவேல் என்பவருக்கு சொந்தமான ஓர் ஆட்டையும் சிறுத்தை தாக்கிக் கொன்றிருந்தது.

இது தொடர்பாக வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார்கள் தெரிவித்ததை அடுத்து வனவர் மோகன் தலைமையில் வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு செய்தபோது சிறுத்தையின் கால் தடங்களைப் பதிவு செய்தனர்.

அந்த சிறுத்தையைப் பிடித்து காட்டுப்பகுதிக்குள் விடுவதற்காக வேம்பையாபுரத்தில் வனத்துறையினர் கூண்டு வைத்தனர். அதில் நாயொன்றை கட்டி வைத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலையில் அந்த கூண்டில் 2 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை சிக்கியது. அச்சிறுத்தையை பாபநாசம் அணையின் மேல்பகுதியில் 15 கி.மீ. தூரத்துக்கு அப்பாலுள்ள அடர்ந்த வனப்பகுதிக்கு வனத்துறையினர் கொண்டு சென்று விட்டனர்.

SCROLL FOR NEXT