தமிழக சட்டப்பேரவை முன்னவராக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் கடந்தாண்டு முதல்வர் மற்றும் எம்எல்ஏ பதவிகளை ஜெயலலிதா இழந்தார். இதையடுத்து, நிதியமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார்.
முன்னதாக, சட்டப்பேரவையில் அவர் வகித்துவந்த பேரவை முன்னவர் பதவி, மின்துறை அமைச்சராக இருந்த நத்தம் விஸ்வநாதனுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த மே 11-ம் தேதி சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலையான ஜெயலலிதா, மீண்டும் முதல்வரானார். அவர் தலைமையில் பொறுப்பேற்ற புதிய அமைச்சரவையில், நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் நியமிக்கப்பட்டார்.
மானிய கோரிக்கை விவாதங்களுக்காக சட்டப்பேரவை இம்மாதம் 24-ம் தேதி கூடுகிறது. இந்நிலையில் பேரவை முன்னவராக பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு இன்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.