தமிழகம்

போட்டித் தேர்வுகளை சந்திக்க கல்லூரி மாணவர்கள் தினமும் செய்தித்தாள்களைப் படிக்க வேண்டும்: தூத்துக்குடி ஆட்சியர் அறிவுரை

செய்திப்பிரிவு

போட்டித் தேர்வுகளை சந்திக்க கல்லூரி மாணவர்கள் தினமும் செய்தித்தாள்களைப் படிக்க வேண்டும் என தூத்துக்குடி ஆட்சியர் அறிவுரை கூறினார்.

தூத்துக்குடியில் ஆதிதிராவிடர் விடுதியில் தங்கி பயிலும் கல்லூரி மாணவியர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் பல்வேறு துறைகளின் நடவடிக்கைகளை பார்வையிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வருவாய்த்துறை, ஊராட்சித் துறை, பேரிடர் மேலாண்மைத்துறை, சுற்றுலாத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைப் பார்வையிட்ட மாணவியர், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியை நேரில் சந்தித்து கலந்துரையாடினர்.

அப்போது, ஆட்சியர் பேசியதாவது: கல்லூரியில் படிக்கும்போதே எதிர்கால லட்சியத்தை வளர்த்துக் கொண்டு, அதற்கேற்ப தங்களை தயார் செய்துகொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் குரூப் 1, குரூப் 2 மற்றும் குரூப் 4 ஆகிய தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மேலும், இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி உள்ளிட்ட பணிகளுக்கு யு.பி.எஸ்.சி. தேர்வு நடத்தப்படுகிறது.

இத்தேர்வில் வெற்றிபெற நன்கு படிப்பதோடு பொது அறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். தினமும் செய்தித் தாள்களை வாசிப்பதை கட்டாயப் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள ஆங்கில நாளிதழ்களை வாசித்து, அதில் தெரியாத சொற்களை அகராதி மூலம் தெரிந்துகொள்ள வேண்டும் என்றார் ஆட்சியர்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சண்முகசுந்தரம், விடுதி காப்பாளர் கலைச்செல்வி மற்றும் கல்லூரி மாணவியர், அலுவலர்கள் கலந்து கொண்டனர். தேர்வில் வெற்றிபெற நன்கு படிப்பதோடு பொது அறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

SCROLL FOR NEXT