விருதுநகர் மாவட்டம், அருப்புக் கோட்டை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட வெளி மாநிலத்தவரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து குடும்பத்தினரிடம் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் ஒப்படைத்தார்.
அருப்புக்கோட்டை அருகே உள்ள பரளச்சியைச் சேர்ந்தவர் கணேசன். முன்னாள் ராணுவ வீரர். தற்போது இயற்கை விவசாயம் செய்கிறார். இவர்
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, அருப்புக்கோட்டையிலிருந்து பரளச்சி செல்லும் வழியில் மனநிலை பாதிக்கப்பட்டு மயக் கமடைந்த நிலையில் கிடந்த ஒரு வரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தார். விசாரித்தபோது அவர் ஒடிசாவைச் சேர்ந்த அசோக்குமார் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து அவருக்குச் சிகிச்சை அளித்து வீட்டிலேயே தங்கவைத்து பாதுகாப்பு அளித்து வந்தார். அசோக்குமாரை அவரது குடும்பத்தினரிடம் சேர்த்து வைக்க பல்வேறு முயற்சிகளை கணேசன் மேற்கொண்டார்.
இதில் ஒடிசாவில் உள்ள அசோக்குமாரின் தம்பி அக்சயகுமாரின் அலைபேசி எண் கிடைத்தது. அதையடுத்து, அக்சயகுமாரைத் தொடர்புகொண்டு அசோக்குமார் குறித்த விவரத்தை கணேசன் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் பரளச்சி வந்த அக்சயகுமாரிடம், அவரது சகோ தரர் அசோக்குமார் போலீஸார் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டார்.