உசிலம்பட்டி அருகே நிகழ்ந்த பெண் சிசுக் கொலை தொடர்பாக முழுமையான விசாரணைக்குப் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதியில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அடையாள அட்டைகளை வழங்கி பேசியதாவது:
உழைக்கும் தொழிலாளர்கள் விபத்தில் மரணம் அடைந்தால் வழங்கப்படும் நிதி உதவியை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக அதிமுக அரசு உயர்த்தியுள்ளது.
வரும் செப்டம்பரில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் கூறியுள்ளார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது பற்றிய திட்டம் பரிசீலனையில் இருந்தபோது இத்திட்டம் வராது என்று கூறி வந்த திமுகவினர் மட்டுமின்றி அவர்களின் தலைவர் மு.க.ஸ்டாலினும் எதிர்காலத்தில் இந்த மருத்துவமனையில்தான் சிகிச்சை பெறுவார்கள். புதுடெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிகரான அனைத்து வசதிகளும் மதுரையில் அமைக்கப்படும் மருத்துவமனையில் கிடைக்கப்போகிறது.
உசிலம்பட்டியில் பெண் குழந்தை கொல்லப்பட்டுள்ளதாக வந்துள்ள தகவல் குறித்து முழு விசாரணைக்குப் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.