பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு குறித்து அநாகரிகமான கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அதை திரும்பப் பெற வேண்டும் என்று பாஜக தேசிய செயலர் எச்.ராஜா வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் காரைக் குடியில் நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என பாஜக 2011-ம் ஆண்டு முதல் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டங்கள் மூலம் வலியுறுத்தி வருகிறது. பாஜகவின் மதுவிலக்கு போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு அளிப்பார்கள்.
ராஜாஜி கடந்த 1971-ம் ஆண்டு கொட்டும் மழையில் கருணாநிதியின் வீட்டுக்குச் சென்று கையை பிடித்துக் கெஞ்சியும், மதுவிலக்கை ரத்து செய்தார் கருணாநிதி. தற்போது, மதுவிலக்கு கோரும் திமுகவின் திடீர் ஞானோதயம் ஆச்சர்யமாக உள்ளது.
பிரதமர், தமிழக முதல்வர் சந்திப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அநாகரிகமாகப் பேசியதற்கு வன்மையாகக் கண்டிக்கிறேன். பிரதமரை முதல்வர் வரவேற்பது மரபு. அது குறித்து அநாகரிகமான கருத்து தெரிவித்ததை, காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் திரும்பப் பெறவேண்டும்.
சிதம்பரத்துக்கு உரிமை இல்லை
காங்கிரஸ் கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லாதவர் ப.சிதம்பரம். பாஜக தாங்கள் விரும்பிய கட்சியோடு கூட்டணி அமைக்கும். இதில் மூக்கை நுழைப்பதற்கு சிதம்பரத்துக்கு உரிமை இல்லை.
கூட்டணி குறித்து பேசுவதற்காக பிரதமர் தமிழகம் வந்தார் என்பது சரியல்ல. தமிழகத்தின் முன்னேற்றத்துக்குப் பல கோரிக்கைகளை செயல்படுத்துமாறு பிரதமரிடம், முதல்வர் ஜெயலலிதா மனு கொடுத்திருக்கிறார். பிரதமர், முதல்வர் சந்திப்பை திசை திருப்பும் வகையில் இவர்கள் பேசுகின்றனர் என்றார்.