க.அன்பழகன் - ஜி.கே.வாசன்: கோப்புப்படம் 
தமிழகம்

க.அன்பழகன் மறைவு: இறுதி மூச்சு வரை மக்களுக்காகவும் திமுகவுக்காகவும் பணியாற்றியவர்; ஜி.கே.வாசன் புகழாஞ்சலி

செய்திப்பிரிவு

மறைந்த திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தன் இறுதி மூச்சு வரை மக்களுக்காகவும் திமுகவுக்காகவும் பணியாற்றியவர் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக. ஜி.கே.வாசன் இன்று வெளியிட்ட இரங்கல் செய்தியில், "திராவிட இயக்கத் தலைவர்களில் முன்னோடியும் தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவருமான திமுகவின் பொதுச்செயலாளர் க.அன்பழகனின் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

இளமைப் பருவம் முதல் திராவிடக் கொள்கைகள் மீது ஈடுபாடு கொண்டு கடைப்பிடித்து, ஆர்வமாகச் செயல்பட்டு வந்தவர். கல்வியில் சிறந்து விளங்கியதால் படிப்பை முடித்த பிறகு துணைப் பேராசிரியராக சிறப்பாக கல்விப்பணி ஆற்றிய பெருமைக்குரியவர்.

திமுகவில் உறுப்பினரானது முதல் படிப்படியாக தனது கடின உழைப்பால் முன்னேறி தொழிற்சங்க செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி பொதுச்செயலாளர் என்ற உயர் பதவியை அடைந்து செயல்பட்டது அவருக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும்.

பெரியாரோடும், அண்ணாவோடும் பழகி அவர்களின் ஆலோசனைகளை ஏற்றுக்கொண்ட க.அன்பழகன், கருணாநிதிக்கு உறுதுணையாக இருந்து கழகப் பணியாற்றியவர். தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக 9 முறை செயல்பட்ட சிறப்புக்குரியவர்.

தமிழக சட்டப்பேரவை மேல்சபை உறுப்பினராக, சட்டப்பேரவை உறுப்பினராக, மக்களவை உறுப்பினராக, தமிழக அமைச்சராக க.அன்பழகன் மக்கள் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. பல்வேறு கட்டுரைகளையும், நூல்களையும் எழுதியிருக்கும் சிறந்த எழுத்தாளர். பேச்சாளராக, எழுத்தாளராக, அரசியல்வாதியாக திமுகவுக்கும், மக்களுக்கும் ஆற்றிய பணிகள் தமிழக மக்களுக்கும், தமிழகத்துக்கும் பயன் தந்திருக்கிறது.

தான் சார்ந்த கட்சி வளர்ச்சி பெற வேண்டும், தமிழகம் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக ஆற்றிய அரும்பணிகளால் தமிழக அரசியல் வரலாற்றில் மிக முக்கிய இடம் பெற்றுவிட்டார். அனைத்து அரசியல் கட்சியினராலும் அன்பு பாராட்டப்பட்டவர். குறிப்பாக மறைந்த மூப்பனாரோடு மரியாதை கலந்த பாசத்தோடு பழகியதை நினைவுகூர்கிறேன்.

இனமானப் பேராசிரியர் என திமுகவினரால் அன்போடு அழைக்கப்படும் க.அன்பழகன் தன் இறுதி முச்சு வரை திமுகவுக்கும் மக்களுக்கும் செய்த பணிகள் பாராட்டத்தக்கவை.

அவரது மறைவு தமிழகத்திற்கும், திமுகவுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் திமுகவினருக்கும், குடும்பத்தாருக்கும் தமாகா சார்பில் ஆழ்ந்த இரங்கல்கள்" என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT