டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்து பேசினார்.
நாடு முழுவதும் குடியுரிமை சட்டம், தேசிய மக்கள் தொகைபதிவேடு (என்பிஆர்), தேசிய குடியுரிமை பதிவேடு (என்ஆர்சி) ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.தமிழகத்திலும் வண்ணாரப்பேட்டை பகுதியில் கடந்த 20 நாட்களாக முஸ்லிம் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக அரசு சார்பில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் புதிதாக இணைக்கப்பட்ட 6 கேள்விகளை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சட்டப்பேரவையிலும் தீர்மானம் கொண்டுவர தமிழக அரசு முயற்சி எடுத்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, தமிழக அமைச்சர்கள் பி.தங்கமணி மற்றும் டி.ஜெயக்குமார் ஆகியோர் சமீபத்தில் சந்தித்து பேசினர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டெல்லி புறப்பட்டுச் சென்றார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை அவர் நேற்று சந்தித்து பேசினார். வழக்கமாக மாதம் ஒருமுறை தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு தொடர்பான அறிக்கை, மத்திய உள்துறைக்கு அனுப்பப்படும். குறிப்பிட்ட நிகழ்வுகளின்போது ஆளுநரே நேரடியாக சென்றுபிரதமர், உள்துறை அமைச்சரை சந்திப்பது வழக்கம். அந்தவகையில், பிரதமர், உள்துறை அமைச்சரை நேற்று சந்தித்து தமிழகத்தில் குடியுரிமை சட்டம், என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராக நடைபெற்றுவரும் போராட்டங்கள் தொடர்பாக ஆளுநர் விவாதித்ததாக கூறப்படுகிறது.