தமிழகம்

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல் கோட்டைமாரியம்மன் கோயில் மாசித்தி ருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி அம்னை வழிபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற விழாக்களில் ஒன்றான கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த பிப்ரவரி 22-ம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது.

பிப்ரவரி 25-ம் தேதி கொடியேற்றத்தை அடுத்து தினமும் பல்வேறு சமுதாயத்தினரின் மண்டபகப்படி நடைபெற்றது.

இதில் இரவில் அம்மன் வீதி உலாவந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் முளைப்பாரி, பால்குடம் எடுத்தும் கோயிலைச் சுற்றி அங்கப்பிரதட்சணம் செய்தும் வழிபட்டனர்.

விழாவின் முக்கியநிகழ்வான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி இன்று காலை 6 மணி முதலே தொடங்கி நடைபெற்றது.

பூக்குழி இறங்க கோயில் நிர்வாகத்திடம் இரண்டாயிரம் பேர் தங்கள் பேரை பதிவு செய்திருந்தனர். விரதமிருந்த பக்தர்கள் ஒவ்வொருவராக பூக்குழி(தீ மிதித்தல்) இறங்கினர். சிலர் தங்கள் குழந்தைகளுடன் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலைவரை பூக்குழி இறங்குதல் நடைபெற்றது.

முன்னதாக அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. விழாவில் தொடர்ச்சியாக நாளை சனிக்கிழமை இரவு தசாவதாரம் நிகழ்ச்சியும், மார்ச் 8 ம் தேதி மஞ்சள்நீராடல், மார்ச் 9-ம் தேதி ஊஞ்சல் உற்சவமும், மார்ச் 10 ம் தேதி தெப்ப உற்சவமும் நடைபெறவுள்ளது.

தினமும் திண்டுக்கல் நகர் மற்றும் இதன் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திண்டுக்கல் வந்து கோட்டை மாரியம்மனை தரிசித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT