தமிழகத்தில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தொகுதி மற்றும் வார்டு மறுவரை பணிகளை மேற்கொள்ள 8 வார காலம் அவகாசம் கேட்டு தமிழ்நாடு மாநில தொகுதி மறுவரையறை ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் ஜெய்சுகின் தொடர்ந்த வழக்கு மற்றும் தமிழகத்தில் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் வார்டு, தொகுதி மறுவரையறை செய்து பின்னர் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று தி.மு.க தரப்பில் போடப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்தது .
பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து பிற பகுதிகளுக்கு தேர்தல் நடத்தலாம் என அப்போது உத்தரவிட்டது. மேலும் பிரிக்கப்பட்ட அந்த 9 மாவட்டங்களிலும் 3 மாதத்தில் வார்டு, தொகுதி மறுவரையறை உள்ளிட்ட அனைத்து சட்டப்பூர்வ பணிகளை மேற்கொண்டு உடனடியாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும் என கடந்த 2019 டிசம்பர் 11-ம் தேதி உத்தரவிட்டது.
இதனையடுத்து தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடந்து முடிந்தது. இந்நிலையில் தற்போது, பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் விதித்த கெடு தேதி விரைவில் முடிய உள்ளது. இதையடுத்து தொகுதி மற்றும் வார்டு மறுவரை பணிகளை மேற்கொள்ள மேலும் 8 வார காலம் அவகாசம் கேட்டு தமிழ்நாடு மாநில தொகுதி மறுவரையறை ஆணையம் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது,
அதில், “கடந்த 2019 டிசம்பர் 11-ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதன்படி 3 மாத காலக்கெடு விரைவில் நிறைவடையவுள்ளது. ஆனால், நிர்வாக காரணங்களால் அந்த 9 மாவட்டங்களில் தொகுதி மறு வரை பணிகள் நிறைவு செய்ய முடியவில்லை, எனவே கூடுதலாக 8 வார காலம் அவகாசம் வேண்டும்” என தமிழ்நாடு மாநிலத் தொகுதி மறுவரையறை ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.