தமிழகம்

பொக்காபுரம் கோயில் திருவிழாவில் குவிந்த குப்பை; சோலூர் பேரூராட்சி செயல் அலுவலர் பணியிடை நீக்கம்; கோயில் நிர்வாகத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம்

ஆர்.டி.சிவசங்கர்

சோலூர் பேரூராட்சி செயல் அலுவலர் தனது பணியில் மெத்தனப் போக்கு காட்டியதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பொக்காபுரம் கோயில் நிர்வாகத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு ஒட்டியுள்ள பகுதி பொக்காபுரம். இங்கு ஆண்டுதோறும் மாரியம்மன் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தத் திருவிழாவின் போது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடுவதால், இங்கு பிளாஸ்டிக் போன்ற குப்பைகள் அதிக அளவில் குவியும்.

பொக்காபுரம் கிராமம் வனப்பகுதி ஒட்டி உள்ளதால் இங்கு யானைகள் நடமாட்டமும் அதிகம். இதனால், பொதுமக்களுக்கு வன விலங்குகளால் இடையூறு ஏற்படாமல் இருக்க வனத்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். இந்த ஆண்டுக்கான மாரியம்மன் தேர்த் திருவிழா பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கி மாரச் 2-ம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் திருவிழாவுக்கு ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.

இதனால், வனப்பகுதியை ஒட்டி ஏராளமான குப்பை மற்றும் பாட்டில்கள் டன் கணக்கில் தேங்கின. குப்பையைச் சுத்தம் செய்யும் பணியில் சிங்காரா சரகர் காந்தன் தலைமையில் வனத்துறையினரும், சோலூர் பேரூராட்சி ஊழியர்களும் ஈடுபட்டனர். சோலூர் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேஷ் இதைக் கண்காணித்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், ஒரு சிலர் பிளாஸ்டிக்கை தரம் பிரிக்காமல் எரித்து சுற்றுச்சூழலுக்கு சீர்கேடு ஏற்படுத்தினர். குப்பைகளைச் சரியாக அகற்றவில்லை. இதை சோலூர் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேஷ் சரியாகக் கண்காணிக்காமல், தனது பணியில் மெத்தனப் போக்கு காட்டியதால் நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா அவரைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

பொக்காபுரம் கோயில் நிர்வாகத்துக்கு அபராதம்

நீலகிரி மாவட்டம் சோலூர் பேருராட்சிக்கு உட்பட்ட பொக்காபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலின் தேர்த் திருவிழாவில் தடை செய்யப்டடுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகம் காணப்பட்டதாலும், சுகாதாரத்தைப் பேணிக் காக்கவில்லை என்ற காரணத்தினாலும் சோலூர் பேரூராட்சி சார்பில் கோயில் நிர்வாகத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த நோட்டீஸ் பொக்காபும் மாரியம்மன் கோயில் நிர்வாகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT