தமிழகம்

தி.மலையில் வழக்கு பதிவு செய்யாமல் இருக்க லஞ்சம்: 2 காவல் உதவி ஆய்வாளர்கள் கைது

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் அருகே பக்தர்களின் உடமைகள் பாதுகாப்பு அறையில், கடந்தமாதம் 25-ம் தேதி விழுப்புரத்தைச் சேர்ந்த ஒருவர், மடிக்கணினியுடன் தனது பையை வைத்துவிட்டு சென்றுள்ளார்.

திரும்பி வந்து பார்த்தபோதுமடிக்கணினியை காணவில்லை. பை மட்டும் இருந்துள்ளது. இதுகுறித்து கோயில் ஊழியர் கிருஷ்ணவேணியிடம் கேட்டபோது அவர் உரிய பதில் கூறவில்லையாம்.

அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, அந்த இடத்தின் அருகே வேறு ஒருவர் பை வைத்திருந்ததும், அந்த நபர் மடிக்கணினியை எடுத்துதனது பையில் வைத்துக் கொண்டுசெல்வதும் தெரிந்தது.

இந்த புகாரில் ஊழியர் கிருஷ்ணவேணி மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என நகர குற்றப்பிரிவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் இளஞ்செழியன், சிறப்பு உதவி ஆய்வாளர் அன்பழகன் ஆகியோர் மிரட்டியுள்ளனர். பயந்த கிருஷ்ணவேணி, முதற்கட்டமாக உதவி ஆய்வாளர்களிடம் ரூ.15 ஆயிரம் கொடுத்துள்ளார். மேலும், ரூ.10 ஆயிரம் கேட்டு நெருக்கடி தரப்பட்டதால் கிருஷ்ணவேணி உறவினர் அசோக், லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்துள்ளார்.

அவர்களது அறிவுரையின் பேரில், காவல் நிலையத்தில் பணியில் இருந்த உதவி ஆய்வாளர்கள் இளஞ்செழியன் மற்றும்அன்பழகனிடம் நேற்று ரூ.5 ஆயிரத்தை அசோக் கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

SCROLL FOR NEXT