கோவையில் இந்து முன்னணி பிரமுகரை, தாக்கியவர்களை கண்டுபிடித்து கைது செய்ய 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கோவை போத்தனூர் அருகே கடைவீதியைச் சேர்ந்தவர் ஆனந்த் என்ற மதுக்கரை ஆனந்த் (33). இவர், இந்து முன்னணி அமைப்பின் மாநகர் மாவட்ட செயலாளராக உள்ளார். இவர், காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் நடந்த குடியுரிமை சட்டத்துக்கான ஆதரவு போராட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு, நேற்று முன்தினம் வீட்டுக்கு செல்லும் வழியில் மர்மநபர்களால் தாக்கப்பட்டார்.
கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், அவர் மேல் சிகிச்சைக்காக பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில், போத்தனூர் காவல் துறையினர் அடையாளம் தெரியாத மர்மநபர்கள் மீது கொலை முயற்சி, தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
முன்னதாக, போராட்டத்தை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்லும் வழியில் தன்னை சிலர் பின் தொடர்ந்து வந்ததாக ஆனந்த், காவல் துறையினரிடம் தெரிவித்து உள்ளார். 2 பேர் இந்த தாக்குதலில் ஈடுபட்டு இருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களை பிடிக்க மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் உத்தரவின் பேரில், 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல்
தாக்குதலில் படுகாயமடைந்த ஆனந்த், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்த அவரது அமைப்பு நிர்வாகிகள், உறுப்பினர்கள் அங்கு திரண்டனர். அப்போது மருத்துவமனைக்கு வந்த மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரை சிலர் தாக்கினர். இதுதொடர்பாக தமிழ்நாடு மீட்டர் ஆட்டோ சங்கத்தின் நிர்வாகிகள், நேற்று மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தனர்.