டெல்லி, பெங்களூரு, தமிழகத்தில் கைதான தீவிரவாதிகள் கர்நாடகா வனப் பகுதிக்குள் பயிற்சி முகாம்கள் அமைக்க திட்டமிட்டது என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ வில்சன், கடந்த ஜனவரி மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தவுபிக், அப்துல் சமீம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியதாக, டெல்லியில் காஜாமொய்தீன், ஜாபர் அலி, அப்துல் சமது ஆகியோரை டெல்லி போலீஸார் கைது செய்தனர். அதேபோல் பெங்களூரில் முகமது ஹனிப் கான்(29), இம்ரான் கான்(32), முகமது சையது(24) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் வில்சன் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கும், டெல்லி மற்றும் பெங்களூரில் கைதானவர்களுக்கும் தொடர்பு இருப்பதும், அவர் களுக்கு தமிழகத்தில் இருந்து சிம் கார்டு விற்பனை செய்யப்பட்டதும் தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து தீவிரவாதஅமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு சிம் கார்டு உள்ளிட்ட உதவிகளைச் செய்து கொடுத்ததாக, சென்னையைச் சேர்ந்த பச்சையப்பன், அன்பரசன், ராஜேஷ், லியாகத் அலி, அப்துல் ரகுமான் ஆகிய 5 பேர் கைது செய்யப்படனர். இந்த வழக்குகள் அனைத்தையும் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) விசாரித்து வருகிறது.
இந்த வழக்குகளில் கைதானவர்களின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் கடந்த மாதம் சோதனை நடத்தினர். இதில் பல்வேறு தகவல்கள் என்ஐஏ அதிகாரிகளுக்கு கிடைத்தன. அதுதொடர்பாக விசாரிப்பதற்காக சிறையில் இருந்தவர்களை காவலில் எடுத்து என்ஐஏ விசாரித்து வருகிறது. இந்த விசாரணையில், இந்தியாவில் நாசவேலைக்கு சதித்திட்டம் தீட்டியது தொடர்பாக பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன.
ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தமிழக தலைவராகச்செயல்பட்ட காஜாமொய்தீன்,தென்னிந்தியாவைச் சேர்ந்த 13 பேரை ஐ.எஸ் இயக்கத்தில் சேர்த்ததாகக் கூறப்படுகிறது. தமிழகம், கர்நாடகா மற்றும் கேரளாவைச் சேர்ந்த இவர்கள், சமீபத்தில் நேபாளம் நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் ஒன்றாக கூடி பேசியுள்ளனர். பின்னர் தனித்தனிக் குழுவாக பிரிந்து சதித்திட்டத்தில் ஈடுபட தயாரானபோதுதான் போலீஸில் சிக்கினர்.
இவர்கள், கர்நாடக மாநிலத்தில் அடர்ந்த வனப்பகுதியில் தீவிரவாத பயிற்சி முகாமை அமைக்கதிட்டமிட்டு இருந்ததும் என்ஐஏவிசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், வெளிநாடுகளில்ஆயுதப் பயற்சி பெற இவர்கள்திட்டம் தீட்டி செயல்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரங்கள் குறித்து என்ஐஏ தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது.