ஓணம் பண்டிகையை வரவேற்று அத்தப்பூ கோலம் இடும் நிகழ்வு இன்று தொடங்குகிறது. இதற்காக தோவாளை மலர் சந்தையில் இருந்து 30 ஆயிரம் கிலோ பூக்களை கேரள வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வாங்கி சென்றனர்.
கேரளாவின் முக்கிய பண்டிகை யான ஓணம் 28-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்கு முந்தைய 10 நாட்களும் ஓணம் சம்பந்தப்பட்ட விழாக்கள் கேரளா வில் அமர்க்களமாக கொண்டாடப் படும்.
ஓணத்தை வரவேற்கும் வகையில் கேரள மாநிலத்தில் வீடுகள், அலுவலகங்கள், சுற்றுலா தலங்கள், வழிபாட்டு தலங்கள் ஆகியவற்றில் இன்றுமுதல் 10 நாட்களுக்கு வண்ண பூக்களாலான அத்தப்பூ கோலம் இடுவர்.
இதற்காக தேவைப்படும் பல வண்ண மலர்கள் மைசூர், ஓசூர், பெங்களூரு, ஊட்டி, மதுரை, அருப்புக்கோட்டை, திண்டுக்கல், சேலம், தோவாளை போன்ற பகுதி களில் இருந்து கேரளா செல்கின் றன. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை மலர் சந்தை யில் இருந்து அதிகமான பூக்கள் கொள்முதல் செய்யப்படுகிறது.
ஓணம் சீஸனுக்கான வியாபா ரம் கடந்த இரு நாட்களாகவே தோவாளையில் களைகட்டி யுள்ளது. அத்தப்பூ கோலத்துக்கான பூக்களை வாங்க கேரளாவில் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் தோவாளையில் குவிந்தனர். கார் மற்றும் பிற வாகனங்களில் கேரள மக்கள் குடும்பத்துடன் வந்து, பூக்களை கொள்முதல் செய்கின்றனர்.
திருவனந்தபுரத்தை சேர்ந்த மலர் வியாபாரி உன்னிகிருஷ்ணன் கூறும்போது, `தோவாளை மலர் சந்தையில் இருந்து கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பூக்கள் கொள்முதல் செய்கிறேன். எனக்கு மட்டும் தினமும் 5 ஆயிரம் கிலோ பூக்கள் தேவை. ஆனால் இன்று 2 ஆயிரம் கிலோ மட்டுமே கிடைத்தது’ என்றார்.
விலை நிலவரம்
மல்லிகை கிலோ ரூ. 250, பிச்சி 400, முல்லை 300-க்கு விற்பனையானது. அதேநேரம் சம்பங்கி, செவ்வந்தி பூக்கள் கிலோ ரூ. 200, தெற்றி பூ 120, அரளி 100, ஓசூர் ரோஜா 150, வாடாமல்லி 100, மரிக்கொழுந்து 120, கோழிக்கொண்டை ரூ. 70-க்கு விற்பனை ஆனது. இது நேற்று முன்தினம் விலையைவிட இரட்டிப்பாகும்.
ஓணம் பூ விற்பனை குறித்து தோவாளை மலர் சந்தை மொத்த வியாபாரி ராஜேந்திரன் கூறும்போது, `அத்தப்பூ கோலத்துக்கான பூக்கள் இன்று (நேற்று) காலை 8 மணிக்குள் விற்றுத் தீர்ந்தன. கேரளாவுக்கு மட்டும் 30 ஆயிரம் கிலோ பூக்கள் கொள்முதல் செய்யப்பட்டன. 28-ம் தேதி ஓணம் வரை 5 லட்சம் கிலோவுக்கு மேல் பூக்கள் தேவைப்படுகிறது. இதற்காக இப்போதே கேரள வியாபாரிகள் முன்பதிவு செய்து வருகின்றனர். அதே நேரம் பூக்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது’ என்றார்.
ஓணத்தை வரவேற்கும் வகையில் கேரள மாநிலத்தில் வீடுகள், அலுவலகங்கள், சுற்றுலா தலங்கள், வழிபாட்டு தலங்கள் ஆகியவற்றில் இன்றுமுதல் 10 நாட்களுக்கு வண்ண பூக்களாலான அத்தப்பூ கோலம் இடுவர். ஓணம் சீஸனுக்கான வியாபாரம் கடந்த இரு நாட்களாகவே தோவாளையில் களைகட்டியுள்ளது.