தான் உயிருடன் இருக்கும்போதே காங்கிரஸ் கட்சிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஈ.வி.கே.எஸ்.சம்பத்தின் 95-வது பிறந்த நாள் விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தமிழகத்தில் இந்தியை திணிக்கக் கூடாது என்பதில் தன் தந்தை ஈ.வி.கே.எஸ்.சம்பத் மிக உறுதியாக இருந்ததாக தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் பிடியில் இருந்து மக்களை காப்பதுதான் காங்கிரஸ் கட்சியின் தலையாய கடமை என்றும் அவர் தெரிவித்தார்.
"எதையோ நாம் சரியாக செய்யவில்லை, தோற்றுவிட்டோம் என்கிற உணர்வு தான் வருகிறது. இனி இருக்கின்ற காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஏதாவது செய்ய வேண்டும், இந்த இயக்கத்தில் உள்ள இளைஞர்களை தூக்கிவிட வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகிறது. என் பின்னால் வருகின்ற உங்களுக்கு என்ன செய்யப் போகின்றேன் என தெரியவில்லை. நான் உயிருடன் இருக்கும்போதே காங்கிரஸ் கட்சிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கிறேன்" என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.