கோயம்பேடு சந்தையில் காய் கறிகள் விலை குறைந்து வருவதற்கு கடந்த ஆண்டு போதிய மழை பெய்ததும், அரசு செயல்படுத்தி வரும் வேளாண் திட்டங்களும் ஒரு காரணம் என்று தோட்டக்கலைத் துறை இயக்குநர் என்.சுப்பையன் தெரிவித்துள்ளார்.
கோயம்பேடு சந்தையில் கடந்த ஒரு மாதமாக காய்கறிகளின் விலை குறைந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி முட்டை கோஸ் கிலோ ரூ.5, புடலங்காய், பீட்ரூட், முள்ளங்கி, நூக்கல் ஆகியவை தலா ரூ.10, வெண்டைக்காய், பச்சை மிளகாய், தக்காளி ஆகிய காய்கறிகள் தலா ரூ.12, பீன்ஸ், அவரை, கேரட் தலா ரூ.15 எனவிலை குறைந்துள்ளது. இக்காய்கறிகள் கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக கோயம்பேடு சந்தை மலர், காய், கனி அங்காடி வியாபாரிகள் நலச் சங்கத் தலைவர் எம்.தியாகராஜன் கூறியதாவது: கடந்த 3 ஆண்டுகளை விட கடந்த ஆண்டு தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. வழக்கமாக ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை வெப்பம் குறைந்து, லேசான பனி மூட்டம் நிலவும் என்பதால் காய்கறிகள் உற்பத்தி அதிகமாக இருக்கும். கோயம்பேடு சந்தைக்கு வரத்தும் அதிகமாக இருக்கும். இதற்கு முன்பு சுமார் 300 லாரிகளில் வந்த காய்கறிகள், தற்போது 450 லாரிகளில் வருகின்றன. அதனால் விலை குறைந்துள்ளது. இன்னும் ஒரு மாதத்துக்கு இதே நிலை நீடிக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிக காய்கறி உற்பத்தி தொடர்பாக அரசு தோட்டக்கலைத் துறை இயக்குநர் என்.சுப்பையன் கூறியதாவது:
கடந்த ஆண்டு பருவமழை போதுமான அளவு பெய்திருந்தது. வறட்சி எங்குமில்லை. காய்கறிஉற்பத்திக்கு சாதகமான தட்பவெப்பநிலை நிலவுகிறது. அதனால் உற்பத்தி அதிகரித்துள்ளது.
மேலும், தோட்டக்கலைத் துறைசார்பில், சிறு சிறு அளவில் காய்கறிகளை பயிரிட்டு விவசாயிகள் கூடுதல் வருவாய் ஈட்டுவது குறித்துவிழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, 5 வகைகாய்கறி விதைகள் அடங்கிய விதை பை, 12 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பை விதைகளையும் சுமார் 3 சென்ட் நிலத்தில் பயிரிட முடியும்.சொட்டுநீர் பாசன முறையில்காய்கறிகள் பயிரிட விவசாயிகளை ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
அதற்கான பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. வழக்கமாக ஒரு ஏக்கரில் பயிரிட தேவையான நீரைக் கொண்டு, சொட்டுநீர் பாசன முறையில் 3 ஏக்கரில் பயிரிட முடியும். இந்த முறையில் பயிர் செய்யும்போது, உரம் இடவும், நீர் பாய்ச்சவும் ஆள் தேவையில்லை. இதற்கு முன்பு போதிய நீர் இல்லை என கைவிடப்பட்ட நிலங்களில், சொட்டுநீர் பாசன முறையில் தற்போது காய்கறிகள் பயிரி டப்படுகின்றன. காய்கறி உற் பத்தி அதிகரிக்க சாதகமான தட்பவெப்பநிலை மட்டுமல்லாது, அரசு செயல்படுத்தி வரும் வேளாண்திட்டங்களும் ஒரு காரணம்.
உற்பத்தியான காய்கறிகளை மதிப்புக்கூட்டு பொருளாக மாற்ற முடியாத நிலை, ஏற்றுமதி வாய்ப்புகள் இல்லாதது போன்ற காரணங்களாலும் வரத்து அதிகரித்திருக்கலாம். அது குறித்து ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.